(1)
உரித்தவன் காண், உரக்களிற்றை உமையாள் ஒல்க
ஓங்காரத்தொருவன் காண், உணர் மெய்ஞானம்
விரித்தவன் காண், விரித்த நால் வேதத்தான் காண்
வியனுலகில் பல்லுயிரை விதியினாலே
தெரித்தவன் காண், சில்லுருவாய்த் தோன்றி எங்கும்
திரண்டவன் காண், திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(2)
நேசன் காண் நேசர்க்கு, நேசம் தன்பால்
இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்
கூசன் காண், கூசாதார் நெஞ்சு தஞ்சே
குடிகொண்ட குழகன் காண், அழகார் கொன்றை
வாசன் காண், மலைமங்கை பங்கன் தான் காண்
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும்
ஈசன் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(3)
பொறையவன் காண், பூமியேழ் தாங்கியோங்கும்
புண்ணியன் காண், நண்ணிய புண்டரிகப் போதின்
மறையவன் காண், மறையவனைப் பயந்தோன் தான் காண்
வார்சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளைப்
பிறையவன் காண், பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப்
பேயோடங்கிடுகாட்டில் எல்லியாடும்
இறையவன் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண், அவன்என் எண்ணத்தானே
(4)
பாரவன் காண், விசும்பவன் காண், பவ்வந்தான் காண்
பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற
சீரவன் காண், திசையவன் காண், திசைகள்எட்டும்
செறிந்தவன் காண், சிறந்தடியார் சிந்தை செய்யும்
பேரவன் காண், பேராயிரங்கள் ஏத்தும்
பெரியவன் காண், அரியவன் காண், பெற்றம் ஊர்ந்த
ஏரவன் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(5)
பெருந்தவத்தெம் பிஞ்ஞகன் காண், பிறைசூடி காண்
பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
மருந்தவன் காண், மந்திரங்கள் ஆயினான் காண்
வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண்
அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம்
அமர்ந்தவன் காண், அமரர்கள் தாம் அர்ச்சித்தேத்த
இருந்தவன் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(6)
ஆய்ந்தவன் காண், அருமறையோடு அங்கம் ஆறும்
அணிந்தவன் காண், ஆடரவோடு என்பும் ஆமை
காய்ந்தவன் காண், கண்ணழலால் காமன் ஆகம்
கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்
பாய்ந்தவன் காண், பண்டுபல சருகால் பந்தர்
பயின்றநூல் சிலந்திக்குப் பாராள் செல்வம்
ஈந்தவன் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(7)
உமையவளை ஒருபாகம் சேர்த்தினான் காண்
உகந்தொலி நீர்க்கங்கை சடையொழுக்கினான் காண்
இமய வடகயிலைச் செல்வன் தான் காண்
இல் பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந்தான் காண்
சமயமவை ஆறினுக்கும் தலைவன் தான் காண்
தத்துவன் காண், உத்தமன் காண், தானேயாய
இமையவன் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(8)
தொண்டுபடு தொண்டர் துயர் தீர்ப்பான் தான் காண்
தூமலர்ச் சேவடியிணை எம் சோதியான் காண்
உண்டுபடு விடம் கண்டத்தொடுக்கினான் காண்
ஒலிகடலில் அமுதம் அமரர்க்குதவினான் காண்
வண்டுபடு மலர்க்கொன்றை மாலையான் காண்
வாண்மதியாய் நாண்மீனும் ஆயினான் காண்
எண்திசையும் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(9)
முந்தை காண், மூவரினும் முதலானான் காண்
மூவிலைவேல் மூர்த்தி காண், முருகவேட்குத்
தந்தை காண், தண்கடமா முகத்தினாற்குத்
தாதை காண், தாழ்ந்தடியே வணங்குவார்க்குச்
சிந்தை காண், சிந்தாத சித்தத்தார்க்குச்
சிவனவன் காண், செங்கண் மால் விடையொன்றேறும்
எந்தை காண், எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(10)
பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் தான் காண்
பூதகண நாதன் காண், புலித்தோலாடை
தன்னிசைய வைத்த எழில் அரவினான் காண்
சங்கவெண் குழைக்காதில் சதுரன் தான் காண்
மின்னிசையும் வெள்ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை
எடுக்க, அடி அடர்ப்ப, மீண்டவன் தன் வாயில்
இன்னிசை கேட்டி லங்கொளி வாளீந்தோன் கச்சி
ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...