திருகானப்பேர் – சுந்தரர் தேவாரம்:

<– திருகானப்பேர்

(1)
தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும்
    சூதன மென்முலையாள் பாகமும் ஆகிவரும்
புண்டரிகப் பரிசாம் மேனியும், வானவர்கள்
    பூசலிடக் கடல் நஞ்சுண்ட கருத்தமரும்
கொண்டலெனத் திகழும் கண்டமும், எண்தோளும்
    கோல நறுஞ்சடைமேல் வண்ணமும், கண்குளிரக்
கண்டு தொழப் பெறுவதென்று கொலோ அடியேன்
    கார்வயல்சூழ் கானப்பேருறை காளையையே
(2)
கூதலிடும் சடையும் கோளரவும் விரவும்
    கொக்கிறகும் குளிர்மா மத்தமும் ஒத்துனதாள்
ஓதல்உணர்ந்தடியார் உன்பெருமைக்கு நினைந்து
    உள்ளுருகா விரசும் ஓசையைப் பாடலும்நீ
ஆதலுணர்ந்தவரோடு அன்பு பெருத்தடியேன்
    அங்கையில் மாமலர்கொண்டு என்கணதல்லல் கெடக்
காதலுறத் தொழுவதென்று கொலோ அடியேன்
    கார்வயல் சூழ் கானப்பேருறை காளையையே
(3)
நானுடை மாடெனவே நன்மை தரும் பரனை
    நற்பதமென்றுணர்வார் சொற்பதமார் சிவனைத்
தேனிடை இன்னமுதை, மற்றதனில் தெளிவைத்
    தேவர்கள் நாயகனைப், பூவுயர் சென்னியனை
வானிடை மாமதியை, மாசறு சோதியனை
    மாருதமும் அனலும் மண்டலமும்ஆய
கானிடை மாநடனென்று எய்துவதென்று கொலோ
    கார்வயல் சூழ் கானப்பேருறை காளையையே
(4)
செற்றவர் முப்புரம் அன்றட்ட சிலைத்தொழிலார்
    சேவகமும் நினைவார் பாவகமும் நெறியும்
குற்றமில் தன்னடியார் கூறுமிசைப் பரிசும்
    கோசிகமும், அரையில் கோவணமும், அதளும்
மற்றிகழ் திண்புயமும் மார்பிடை நீறுதுதை
    மாமலை மங்கை உமைசேர் சுவடும், புகழக்
கற்றனவும் பரவிக் கைதொழல் என்றுகொலோ
    கார்வயல் சூழ் கானப்பேருறை காளையையே
(5)
கொல்லை விடைக் குழகும், கோல நறுஞ்சடையில்
    கொத்தலரும் இதழித் தொத்தும், அதனருகே
முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால்
    மோக மிகுத்திலகும் கூறுசெய் அப்பரிசும்
தில்லை நகர்ப் பொதுவுற்றாடிய சீர்நடமும்
    திண்மழுவும், கைமிசைக் கூரெரியும், அடியார்
கல்லவடப் பரிசும் காணுவதென்று கொலோ
    கார்வயல் சூழ் கானப்பேருறை காளையையே
(6)
பண்ணுதலைப் பயனார் பாடலும் நீடுதலும்
    பங்கய மாதனையார் பத்தியும் முத்தியளித்து
எண்ணுதலைப் பெருமான் என்றெழுவார் அவர்தம்
    ஏசறவும் இறையாம் எந்தையையும் விரவி
நண்ணுதலைப் படுமாறெங்ஙனம் என்றயலே
    நையுறும் என்னை மதித்துய்யும் வணம் அருளும்
கண்ணுதலைக் கனியைக் காண்பதும் என்றுகொலோ
    கார்வயல் சூழ் கானப்பேருறை காளையையே
(7)
மாவை உரித்ததள் கொண்டு அங்கம் அணிந்தவனை
    வஞ்சர் மனத்திறையும் நெஞ்சணுகாதவனை
மூவர்உருத் தனதாம் மூல முதற்கருவை
    மூசிடு மால்விடையின் பாகனை, ஆகமுறப்
பாவகமின்றி மெய்யே பற்றுமவர்க்கமுதைப்
    பால் நறுநெய் தயிர் ஐந்தாடு பரம்பரனைக்
காவல் எனக்கிறை என்றெய்துவதென்று கொலோ
    கார்வயல் சூழ் கானப்பேருறை காளையையே
(8)
தொண்டர் தமக்கெளிய சோதியை, வேதியனைத்
    தூய மறைப்பொருளாம் நீதியை, வார்கடல்நஞ்சு
உண்டதனுக்கிறவாது என்றும் இருந்தவனை
    ஊழி படைத்தவனோடு ஒள்ளரியும் உணரா
அண்டனை, அண்டர் தமக்காகமநூல் மொழியும்
    ஆதியை, மேதகு சீரோதியை, வானவர்தம்
கண்டனை, அன்பொடு சென்றெய்துவதென்று கொலோ
    கார்வயல் சூழ் கானப்பேருறை காளையையே
(9)
நாதனை நாதமிகுத்து ஓசையதானவனை
    ஞான விளக்கொளியாம் ஊனுயிரைப் பயிரை
மாதனை, மேதகு தன் பத்தர் மனத்திறையும்
    பற்று விடாதவனைக், குற்றமில் கொள்கையனைத்
தூதனை, எந்தனைஆள் தோழனை, நாயகனைத்
    தாழ் மகரக் குழையும் தோடும் அணிந்த !திருக்
காதனை, நாயடியேன் எய்துவதென்று கொலோ
    கார்வயல் சூழ் கானப்பேருறை காளையையே
(10)
கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப்
    பேருறை காளையை, ஒண் சீருறை தண்தமிழால்
உன்னி மனத்தயரா உள்ளுருகிப் பரவும்
    ஒண்பொழில் நாவலர் கோனாகிய ஆரூரன்
பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார்
    பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும்
    மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page