திருகானப்பேர் – சம்பந்தர் தேவாரம்:

<– திருகானப்பேர்

(1)
பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ
விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடும்
கடியுலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல்நின்
அடியலால் அடைசரண் உடையரோ அடியரே
(2)
நுண்ணிடைப் பேரல்குல் நூபுர மெல்லடிப்
பெண்ணின் நல்லாளைஓர் பாகமாப் பேணினான்
கண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர்
விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே
(3)
வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினம்
காவிவாய்ப் பண்செயும் கானப்பேர் அண்ணலை
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர்
தூவிவாய்ப் பெய்து நின்றாட்டுவார் தொண்டரே
(4)
நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளும்
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்
குறையுடை அவர்க்கலால் களைகிலார் குற்றமே
(5)
ஏனப்பூண் மார்பின்மேல் என்பு பூண்டு, ஈறிலா
ஞானப்பேர் ஆயிரம் பேரினான் அண்ணிய
கானப்பேர் ஊர்தொழும் காதலார் தீதிலர்
வானப்பேர் ஊர்புகும் வண்ணமும் வல்லரே
(6)
பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்
வெள்ளமே தாங்கினான், வெண்மதி சூடினான்
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும்என் உள்ளமே
(7)
மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்
கானமார் கடகரி வழிபடும் கானப்பேர்
ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணில்
ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே
(8)
வாளினான் வேலினான், மால்வரை எடுத்ததிண்
தோளினான் நெடுமுடி தொலையவே ஊன்றிய
தாளினான், கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளுநாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே
(9)
சிலையினான் முப்புரம் தீயெழச் செற்றவன்
நிலையிலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான்
கலையினார் புறவில்தேன் கமழ்தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவமுடையார்களே
(10)
உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்துச்சி
பறித்தலும் போர்த்தலும் பயனிலை பாவிகாள்
மறித்தலை மடப்பிடி வளர்இளம் கொழுங்கொடி
கறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே
(11)
காட்டகத்தாடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத்திளவரால் குதிகொளும் காழியான்
நாட்டகத்தோங்கு சீர் ஞானசம்பந்தன
பாட்டகத்திவை வலார்க்கில்லையாம் பாவமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page