திருஇராமேச்சுரம் (இராமேஸ்வரம்) – அப்பர் தேவாரம்:

<– திருஇராமேச்சுரம்

(1)
பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்துத் தக்க
வாசமிக்க அலர்கள் கொண்டு மதியினான் மால்செய் கோயில்
நேசமிக்க அன்பினாலே நினைமினீர் நின்று நாளும்
தேசமிக்கான் இருந்த திருஇராமேச்சுரம்மே
(2)
முற்றின நாள்களென்று முடிப்பதே காரணமாய்
உற்றவன் போர்களாலே உணர்விலா அரக்கர் தம்மைச்
செற்றமால் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தைப்
பற்றிநீ பரவு நெஞ்சே படர்சடை ஈசன் பாலே
(3)
கடலிடை மலைகள் தம்மால் அடைத்துமால் கருமமுற்றித்
திடலிடைச் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தைத்
தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மையின்றி
உடலிடை நின்றும் பேரா ஐவராட்டுண்டு நானே
(4)
குன்று போல் தோளுடைய குணமிலா அரக்கர் தம்மைக்
கொன்று போராழி அம்மால் வேட்கையால் செய்த கோயில்
நன்றுபோல் நெஞ்சமேநீ நன்மையை அறிதியாயில்
சென்றுநீ தொழுதுய் கண்டாய் திருஇராமேச்சுரம்மே
(5)
வீரமிக்கெயிறு காட்டி விண்ணுற நீண்ட அரக்கன்
கூரமிக்கவனைச் சென்று கொன்றுடன் கடற்படுத்துத்
தீரமிக்கான் இருந்த திருஇராமேச்சுரத்தைக்
கோரமிக்கார் தவத்தால் கூடுவார் குறிப்புளாரே
(6)
ஆர்வல நம்மில் மிக்கார் என்ற அவ்வரக்கர் கூடிப்
போர்வலம் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்
தேர்வலம் செற்ற மால்செய் திருஇராமேச்சுரத்தைச்
சேர்மட நெஞ்சமேநீ செஞ்சடை எந்தை பாலே
(7)
வாக்கினால் இன்புரைத்து வாழ்கிலார் தம்மையெல்லாம்
போக்கினால் புடைத்தவர்கள் உயிர்தனை உண்டு மால்தான்
தேக்குநீர் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தை
நோக்கினால் வணங்குவார்கள் நோய்வினை நுணுகுமன்றே
(8)
பலவுநாள் தீமை செய்து, பார்தன்மேல் குழுமி வந்து
கொலைவிலார் கொடியராய அரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தைத்
தலையினால் வணங்குவார்கள் தாழ்வராம் தவமதாமே
(9)
கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மையெல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்துபின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தை
நாடிவாழ் நெஞ்சமேநீ நன்னெறி ஆகுமன்றே
(10)
வன்கண்ணர் வாளரக்கர், வாழ்வினை ஒன்றறியார்
புன்கண்ணராகி நின்று போர்கள் செய்தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தைத்
தங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே
(11)
வரைகள் ஒத்தே உயர்ந்த மணிமுடி அரக்கர் கோனை
விரைய முற்றற ஒடுக்கி மீண்டுமால் செய்த கோயில்
திரைகள் முத்தால் வணங்கும் திருஇராமேச்சுரத்தை
உரைகள் பத்தாலும் உரைப்பார் உள்குவார் அன்பினாலே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page