திருஇராமேச்சுரம் (இராமேஸ்வரம்) – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருஇராமேச்சுரம்

(1)
திரிதரு மாமணி நாகமாடத் திளைத்தொரு தீஅழல்வாய்
நரிகதிக்க எரியேந்திஆடு நலமே தெரிந்துணர்வார்
எரிகதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுர மேய
விரிகதிர் வெண்பிறை மல்குசென்னி விமலர் செயும்செயலே
(2)
பொறிகிளர் பாம்பரை ஆர்த்தயலே புரிவோடு உமைபாடத்
தெறிகிளரப் பெயர்ந்தெல்லியாடும் திறமே தெரிந்துணர்வார்
எறிகிளர் வெண்திரை வந்துபேரும் இராமேச்சுர மேய
மறிகிளர் மான்மழுப் புல்கு கை எம்மணாளர் செயும்செயலே
(3)
அலைவளர் தண்புனல் வார்சடை மேல்அடக்கி, ஒருபாகம்
மலைவளர் காதலி பாட, ஆடி மயக்கா வரு மாட்சி
இலைவளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுர மேயார்
தலைவளர் கோலநன் மாலைசூடும் தலைவர் செயும்செயலே
(4)
மாதன நேரிழையேர் தடங்கண் மலையான் மகள் பாடத்
தேதெரி அங்கையிலேந்தி ஆடும் திறமே தெரிந்துணர்வார்
ஏதமிலார் தொழுதேத்தி வாழ்த்தும் இராமேச்சுர மேயார்
போது வெண்திங்கள் பைங்கொன்றை சூடும்புனிதர் செயும்செயலே
(5)
சூலமோடு ஒண்மழு நின்றிலங்கச், சுடுகாடு இடமாகக்
கோலநன் மாதுடன் பாடஆடும் குணமே குறித்துணர்வார்
ஏல நறும்பொழில் வண்டுபாடும் இராமேச்சுர மேய
நீலமார் கண்டமுடைய எங்கள் நிமலர் செயும்செயலே
(6)
கணைபிணை வெஞ்சிலை கையிலேந்திக் காமனைக் காய்ந்தவர்தாம்
இணைபிணை நோக்கி நல்லாளோடுஆடும் இயல்பினராகி, நல்ல
இணைமலர் மேலன்னம் வைகு கானல் இராமேச்சுர மேயார்
அணைபிணை புல்கு கரந்தை சூடும்அடிகள் செயும்செயலே
(7)
நீரினார் புன்சடை பின்புதாழ நெடுவெண் மதிசூடி
ஊரினார் துஞ்சிருள் பாடியாடும் உவகை தெரிந்துணர்வார்
ஏரினார் பைம்பொழில் வண்டுபாடும் இராமேச்சுர மேய
காரினார் கொன்றை வெண்திங்கள் சூடுங்கடவுள் செயும்செயலே
(8)
பொன்திகழ் சுண்ணவெண்ணீறு பூசிப், புலித்தோல் உடையாக
மின்திகழ் சோதியர், பாடலாடல் மிக்கார் வரு மாட்சி
என்று நல்லோர்கள் பரவியேத்தும் இராமேச்சுர மேயார்
குன்றினால் அன்றரக்கன் தடந்தோள் அடர்த்தார் கொளும் கொள்கையே
(9)
கோவல நான்முகன் நோக்கொணாத குழகன், அழகாய
மேவலன், ஒள்ளெரி ஏந்தியாடும் இமையோர் இறை, மெய்ம்மை
ஏவலனார் புகழ்ந்தேத்தி வாழ்த்தும் இராமேச்சுர மேய
சேவல வெல்கொடி ஏந்து கொள்கை எம்இறைவர் செயும்செயலே
(10)
பின்னொடு முன்னிடு தட்டைச் சாத்திப் பிரட்டே திரிவாரும்
பொன்னெடும் சீவரப் போர்வையார்கள் புறங்கூறல் கேளாதே
இன்னெடும் சோலைவண்டு யாழ்முரலும் இராமேச்சுர மேய
பன்னெடு வெண்தலை கொண்டுழலும் பரமர் செயும்செயலே
(11)
தேவியை வவ்விய தென்னிலங்கை அரையன் திறல்வாட்டி
ஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை
நாவியல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்றேத்தும்
பாவியல் மாலை வல்லார் அவர்தம் வினையாயின பற்றறுமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page