(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
வரிவளர் அவிரொளி அரவரைதாழ, வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால் வலனேந்திக், கனலெரிஆடுவர் காடரங்காக
விரிவளர் தருபொழில் இளமயில்ஆல, வெண்ணிறத்தருவிகள் திண்ணெனவீழும்
எரிவளர் இனமணி புனமணிசாரல் இடைச்சுர மேவிய இவர் வணம்என்னே
(2)
ஆற்றையும் ஏற்றதோர் அவிர்சடை உடையர், அழகினை அருளுவர், குழகலதறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை உடையர், நடுஇருளாடுவர், கொன்றையந்தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை, செருச்செய ஓர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொடுழி தரும் எழில்திகழ் சாரல், இடைச்சுர மேவிய இவர் வணம்என்னே
(3)
கானமும் சுடலையும் கற்படுநிலனும் காதலர், தீதிலர், கனல் மழுவாளர்
வானமும் நிலமையும் இருமையும் ஆனார், வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடுகமழ, நளிர்பொழில் இளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல், இடைச்சுர மேவிய இவர் வணம்என்னே
(4)
கடமணி மார்பினர், கடல்தனில்உறைவார் காதலர், தீதிலர், கனல் மழுவாளர்
விடமணி மிடறினர், மிளிர்வதோர் அரவர், வேறுமோர் சரிதையர், வேடமும் உடையர்
வடமுலை அயலன கருங்குருந்தேறி, வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்
இடமுலை அரிவையர் எழில்திகழ் சாரல், இடைச்சுர மேவிய இவர்வணம்என்னே
(5)
கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக் கண்ணியர், வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர், விடைஉயர் கொடியர், நிழல்திகழ் மழுவினர், அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண்செய்யும், செழும்புனல் அனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொடெழில் திகழ் சாரல், இடைச்சுர மேவிய இவர்வணம்என்னே
(6)
தோடணி குழையினர், சுண்ண வெண்ணீற்றர், சுடலையில் ஆடுவர், தோலுடையாகப்
பீடுயர் செய்ததோர் பெருமையை உடையர், பேயுடன்ஆடுவர், பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி, குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல், இடைச்சுரம் மேவிய இவர்வணம்என்னே
(7)
கழல் மல்கு காலினர், வேலினர், நூலர், கவர்தலை அரவொடு கண்டியும் பூண்பர்
அழல் மல்கும் எரியொடு மணி மழுவேந்தி, ஆடுவர் பாடுவர் ஆரணங்குடையர்
பொழில் மல்கு நீடிய மரவமும்அரவ மன்னிய கவட்டிடைப் புணர்குயில்ஆலும்
எழில் மல்கு சோலையில் வண்டிசை பாடும், இடைச்சுரம் மேவிய இவர்வணம் என்னே
(8)
தேங்கமழ் கொன்றையம் திருமலர் புனைவார், திகழ்தரு சடைமிசைத் திங்களும் சூடி
வீந்தவர் சுடலை வெண்ணீறு மெய்பூசி, வேறுமோர் சரிதையர், வேடமும் உடையர்
சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்தலம்பித், தவழ்கன மணியொடு மிகு பளிங்கிடறி
ஏந்து வெள்ளருவிகள் எழில்திகழ் சாரல், இடைச்சுரம் மேவிய இவர்வணம்என்னே
(9)
பலஇலம் இடுபலி கையில் ஒன்றேற்பர், பலபுகழல்லது பழியிலர் தாமும்
தலையிலங்கவிரொளி நெடுமுடியரக்கன் தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை உடையர்
மலையிலங்கருவிகள் மண முழவதிர, மழைதவழ் இளமஞ்ஞை மல்கிய சாரல்
இலைஇலவங்கமும் ஏலமும் கமழும், இடைச்சுரம் மேவிய இவர்வணம்என்னே
(10)
பெருமைகள் தருக்கியோர் பேதுறுகின்ற பெருங்கடல் வண்ணனும் பிரமனும்ஓரா
அருமையர், அடிநிழல் பரவி நின்றேத்தும் அன்புடை அடியவர்க்கணியரும் ஆவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக், கயலினம் வயலிள வாளைகள்இரிய
எருமைகள் படிதர இளஅனம்ஆலும், இடைச்சுரம் மேவிய இவர்வணம்என்னே
(11)
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும், மருவிய வயல்தனில் வருபுனல் காழிச்
சடைச்சுரத்துறைவதோர் பிறையுடை அண்ணல், சரிதைகள் பரவி நின்றுருகு சம்பந்தன்
புடைச்சுரத்தருவரைப் பூக்கமழ்சாரல், புணர்மட நடையவர் புடையிடை ஆர்ந்த
இடைச்சுரம்ஏத்திய இசையொடு பாடல் இவை சொலவல்லவர் பிணியிலர் தாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...