திருஆலவாய் (மதுரை) – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருஆலவாய்

(1)
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை, வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி, பாண்டிமாதேவி பணிசெய்து நாள்தொறும் பரவப்
பொங்கழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே
(2)
வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன், வெள்ளை நீறணியும்
கொற்றவன் தனக்கு மந்திரியாய குலச்சிறை குலாவி நின்றேத்தும்
ஒற்றைவெள் விடையன், உம்பரார் தலைவன், உலகினில் இயற்கையை ஒழித்திட்டு
அற்றவர்க்கற்ற சிவன்உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே
(3)
செந்துவர் வாயாள், சேலன கண்ணாள், சிவன் திருநீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப், பாரிடை நிலவும்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தம் தண்ணெருக்கம் மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே
(4)
கணங்களாய் வரினும், தமியராய் வரினும், அடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியும் குலச்சிறை குலாவும் கோபுரம்சூழ் மணிக்கோயில்
மணங்கமழ் கொன்றை வாளரா மதியம் வன்னிவண் கூவிள மாலை
அணங்கு வீற்றிருந்த சடைமுடி அண்ணல்  ஆலவாய் ஆவதும் இதுவே
(5)
செய்ய தாமரைமேல் அன்னமே அனைய சேயிழை திருநுதல் செல்வி
பையரா அல்குல் பாண்டிமாதேவி நாள்தொறும் பணிந்து இனிதேத்த
வெய்யவேல் சூலம் பாசம் அங்குச மான் விரிகதிர் மழுவுடன் தரித்த
ஐயன் அருமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே
(6)
நலமிலராக, நலமது உண்டாக, நாடவர் நாடறிகின்ற
குலமிலராகக் குலமதுண்டாகத் தவம்பணி குலச்சிறை பரவும்
கலைமலி கரத்தன், மூவிலை வேலன், கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி அண்ணல்  ஆலவாய் ஆவதும் இதுவே
(7)
முத்தின்தாழ் வடமும், சந்தனக் குழம்பு நீறும் தன் மார்பினில் முயங்கப்
பத்தியார்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தாற்போல்
அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே
(8)
நாஅணங்கு இயல்பாம்  அஞ்செழுத்தோதி நல்லராய் நல்லியல்பாகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங்கியல்பாம் இராவணன் திண்தோள் இருபது நெரிதர ஊன்றி
ஆவணங்கொண்ட சடைமுடி அண்ணல்  ஆலவாய் ஆவதும் இதுவே
(9)
மண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னு மணிமுடிச் சோழன் தன் மகளாம்
பண்ணினேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணிசெய்து பரவ
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்பரிதாம் வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே
(10)
தொண்டராய் உள்ளார் திசைதிசை தோறும் தொழுதுதன் குணத்தினைக் குலாவக்
கண்டு நாள்தொறும் இன்புறுகின்ற குலச்சிறை கருதி நின்றேத்தக்
குண்டராய் உள்ளார் சாக்கியர் தங்கள் குறியின்கண் நெறியிடை வாரா
அண்டநாயகன் தான்அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே
(11)
பன்னலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை எனும்இவர் பணியும்
அந்நலம் பெறுசீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுண் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவைகொண்டு
இன்னலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page