(1)
மானினேர் விழி மாதராய், வழுதிக்கு மாபெரும்தேவி கேள்
பால்நல் வாயொரு பாலன் ஈங்கிவன் என்றுநீ பரிவெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய இடங்களில் பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளியேன் அலேன், திருஆலவாய் அரன் நிற்கவே
(2)
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப்
பாகதத்தொடு இரைத்துரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா
மாகதக்கரி போல்திரிந்து புரிந்து நின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளியேன் அலேன், திருஆலவாய் அரன் நிற்கவே
(3)
அத்தகுபொருள் உண்டும்இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா
ஒத்தொவ்வாமை ஒழிந்துவாதில் அழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்தொடிந்து சனங்கள் வெட்குற நக்கமே
சித்திரர்க்கெளியேன் அலேன், திருஆலவாய் அரன் நிற்கவே
(4)
சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமைசேர்
கந்துசேனனும் கனகசேனனும் முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல் திரிந்து, ஆரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்கெளியேன் அலேன், திருஆலவாய் அரன் நிற்கவே
(5)
கூட்டினார் கிளியின் விருத்தம் உரைத்ததோர் ஒலியின் தொழில்
பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலும் எக்கர் தங்களைப், பல்லறம்
காட்டியேவரு மாடெலாம் கவர் கையரைக் கசிவொன்றிலாச்
சேட்டைகட்கெளியேன் அலேன், திருஆலவாய் அரன் நிற்கவே
(6)
கனக நந்தியும், புட்ப நந்தியும், பவண நந்தியும், குமணமா
சுனக நந்தியும், குனக நந்தியும், திவண நந்தியும் மொழிகொளா
அனக நந்தியர் மதுஒழிந்து அவமே தவம்புரிவோம் எனும்
சினகருக்கெளியேன் அலேன், திருஆலவாய் அரன் நிற்கவே
(7)
பந்தணம் அவை ஒன்றிலம், பரிவு ஒன்றிலம், என வாசக
மந்தணம் பலபேசி, மாசறு சீர்மையின்றி, அநாயமே
அந்தணம், அருகந்தணம் அது, புத்தணம் அது, சித்தணச்
சிந்தணர்க்கெளியேன் அலேன், திருஆலவாய் அரன் நிற்கவே
(8)
மேலெனக்கெதிரில்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீப்
போலியைப், பணியக்கிலாதொரு பொய்த்தவம் கொடு, குண்டிகை
பீலிகைக் கொடு, பாயிடுக்கி நடுக்கியே பிறர்பின் செலும்
சீலிகட்கெளியேன் அலேன், திருஆலவாய் அரன் நிற்கவே
(9)
பூமகற்கும் அரிக்கும் ஓர்வரு புண்ணியன், அடி போற்றிலார்
சாமவத்தையினார்கள் போல் தலையைப் பறித்தொரு பொய்த்தவம்
வேமவத்தை செலுத்தி, மெய்ப் பொடியட்டி, வாய் சகதிக்கு நேர்
ஆமவர்க்கெளியேன அலேன், திருஆலவாய் அரன் நிற்கவே
(10)
தங்களுக்கும் அச்சாக்கியர்க்கும் தரிப்பொணாத நற்சேவடி
எங்கள் நாயகன் ஏத்தொழிந்து, இடுக்கே மடுத்தொரு பொய்த்தவம்
பொங்குநூல் வழியன்றியே, புலவோர்களைப் பழிக்கும் பொலா
அங்கதர்க்கெளியேன அலேன், திருஆலவாய் அரன் நிற்கவே
(11)
எக்கராம் அமண் கையருக்கெளியேன் அலேன் திருஆலவாய்ச்
சொக்கன் என்னுள் இருக்கவே, துளங்கும்முடித் தென்னன் முன்னிவை
தக்கசீர்ப் புகலிக்குமன் தமிழ்நாதன் ஞானசம்பந்தன் வாய்
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கிடர் இல்லையே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...