திருஆலவாய் (மதுரை) – சம்பந்தர் தேவாரம் (9):

<– திருஆலவாய்

(1)
ஆலநீழல் உகந்தது இருக்கையே, ஆன பாடல் உகந்தது இருக்கையே
பாலினேர் மொழியாள் ஒரு பங்கனே, பாதம் ஓதலர்சேர் புரபங்கனே
கோலநீறணி மேதகு பூதனே, கோதிலார் மன மேவிய பூதனே
ஆல நஞ்சமுதுண்ட களத்தனே, ஆலவாய்உறை அண்டர்கள் அத்தனே
(2)
பாதியா உடன்கொண்டது மாலையே, பாம்பு தார்மலர்க் கொன்றை நன்மாலையே
கோதில் நீறது பூசிடும் ஆகனே, கொண்ட நற்கையில் மான்இடம் ஆகனே
நாதன் நாள்தொறும் ஆடுவது ஆனையே, நாடியன்று உரிசெய்ததும் ஆனையே
வேதநூல் பயில்கின்றது வாயிலே, விகிர்தன்ஊர் திருஆல நல்வாயிலே
(3)
காடுநீடது உறப்பல கத்தனே, காதலால் நினைவார் தம் அகத்தனே
பாடு பேயொடு பூதம் மசிக்கவே, பல்பிணத்தசை நாடி அசிக்கவே
நீடுமா நடமாட விருப்பனே, நின்னடித் தொழ நாளும் இருப்பனே
ஆடல் நீள்சடை மேவிய அப்பனே, ஆலவாயினில் மேவிய அப்பனே
(4)
பண்டயன் தலையொன்றும் அறுத்தியே, பாதம்ஓதினர் பாவம் அறுத்தியே
துண்ட வெண்பிறை சென்னி இருத்தியே, தூய வெள்ளெருதேறி இருத்தியே
கண்டு காமனை வேவ விழித்தியே, காதல்இல்லவர் தம்மை இழித்தியே
அண்டநாயகனே மிகு கண்டனே, ஆலவாயினில் மேவி அகண்டனே
(5)
சென்று தாதை உகுத்தனன் பாலையே, சீறிஅன்பு செகுத்தனன் பாலையே
வென்றிசேர்மழுக் கொண்டுமுன் காலையே, வீட வெட்டிடக் கண்டுமுன் காலையே
நின்ற மாணியை ஓடின கங்கையால், நிலவமல்கி உதித்தனகம் கையால்
அன்று நின்னுருவாகத் தடவியே, ஆலவாய் அரன் ஆகத்துஅடவியே
(6)
நக்கம்ஏகுவர் நாடுமோர் ஊருமே, நாதன் மேனியில் மாசுணம் ஊருமே
தக்க பூமனைச் சுற்றக் கருளொடே, தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே
மிக்க தென்னவன் தேவிக்கு அணியையே, மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே
அக்கினாரமுதுண் கலனோடுமே, ஆலவாய் அரனார் உமையோடுமே
(7)
வெய்யவன் பல் உகுத்தது குட்டியே, வெங்கண் மாசுணம் கையது குட்டியே
ஐயனே அனலாடிய மெய்யனே, அன்பினால் நினைவார்க்கருள் மெய்யனே
வையமுய்ய அன்றுண்டது காளமே, வள்ளல் கையது மேவு கங்காளமே
ஐயமேற்பது உரைப்பது வீணையே, ஆலவாய் அரன் கையது வீணையே
(8)
தோள்கள் பத்தொடு பத்து மயக்கியே, தொக்கதேவர் செருக்கை மயக்கியே
வாளரக்கன் நிலத்துக் களித்துமே, வந்த மால்வரை கண்டு களித்துமே
நீள்பொருப்பை எடுத்த உன்மத்தனே, நின்விரல் தலையால் மத அத்தனே
ஆளும்ஆதி முறித்தது மெய்கொலோ, ஆலவாய் அரன் உய்த்தது மெய்கொலோ
(9)
பங்கயத்துள நான்முகன் மாலொடே, பாதநீள்முடி நேடிட மாலொடே
துங்கநல் தழலின் உருவாயுமே, தூயபாடல் பயின்றது வாயுமே
செங்கயல் கணினார் இடு பிச்சையே, சென்று கொண்டுரை செய்வது பிச்சையே
அங்கியைத் திகழ்விப்பது இடக்கையே, ஆலவாய் அரனார திடக்கையே
(10)
தேரரோடமணர்க்கு நல்கானையே, தேவர் நாள்தொறும் சேர்வது கானையே
கோரமட்டது புண்டரிகத்தையே, கொண்ட நீள்கழல் புண்டரிகத்தையே
நேரில்ஊர்கள் அழித்தது நாகமே, நீள்சடைத் திகழ்கின்றது நாகமே
ஆரமாக உகந்ததென்பதே, ஆலவாய் அரனார் இடம் என்பதே
(11)
ஈனஞானிகள் தம்மொடு விரகனே, ஏறு பல்பொருள் முத்தமிழ் விரகனே
ஆன காழியுள் ஞானசம்பந்தனே, ஆலவாயினில் மேயசம் பந்தனே
ஆன வானவர் வாயினுள் அத்தனே, அன்பரானவர் வாயின் உளத்தனே
நானுரைத்தன செந்தமிழ் பத்துமே, வல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page