திருஆலவாய் (மதுரை) – சம்பந்தர் தேவாரம் (8):

<– திருஆலவாய்

(1)
வீடலால் அவாஇலாய் விழுமியார்கள் நின்கழல்
பாடலால வாயிலாய், பரவ நின்ற பண்பனே
காடலால் அவாஇலா கபாலி, நீள் கடிம்மதில்
கூடல் ஆலவாயிலாய் குலாயதென்ன கொள்கையே
(2)
பட்டிசைந்த அல்குலாள் பாவையாள் ஓர் பாகமா
ஒட்டிசைந்ததன்றியும், உச்சியாள் ஒருத்தியாக்
கொட்டிசைந்த ஆடலாய், கூடல் ஆலவாயிலாய்
எட்டிசைந்த மூர்த்தியாய் இருந்தவாறிதென்னையே
(3)
குற்றநீ குணங்கள்நீ, கூடல் ஆலவாயிலாய்
சுற்றநீ பிரானும்நீ, தொடர்ந்திலங்கு சோதிநீ
கற்றநூல் கருத்துநீ, அருத்தம் இன்பம் என்றிவை
முற்றுநீ புகழ்ந்துமுன் உரைப்பதென் முகம்மனே
(4)
முதிருநீர்ச் சடைமுடி முதல்வன்நீ, முழங்கழல்
அதிரவீசி ஆடுவாய், அழகன்நீ, புயங்கன்நீ
மதுரன்நீ, மணாளன்நீ, மதுரை ஆலவாயிலாய்
சதுரன்நீ, சதுர்முகன் கபாலமேந்து சம்புவே
(5)
கோலமாய நீள்மதில் கூடல் ஆலவாயிலாய்
பாலனாய தொண்டு செய்து பண்டும்இன்றும் உன்னையே
நீலமாய கண்டனே, நின்னையன்றி நித்தலும்
சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே
(6)
பொன் தயங்கிலங்கொளி நலங்குளிர்ந்த புன்சடை
பின்தயங்க ஆடுவாய், பிஞ்ஞகா, பிறப்பிலீ
கொன்றையம் முடியினாய், கூடல் ஆலவாயிலாய்
நின்தயங்கி ஆடலே நினைப்பதே நியமமே
(7)
ஆதியந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே
சோதிஅந்தம் ஆயினாய், சோதியுள்ஒர் சோதியாய்
கீதம்வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கலால்
ஓதிவந்த வாய்மையால் உணர்ந்துரைக்கலாகுமே
(8)
கறையிலங்கு கண்டனே, கருத்திலாக் கருங்கடல்
துறைஇலங்கை மன்னனைத் தோளடர ஊன்றினாய்
மறையிலங்கு பாடலாய், மதுரை ஆலவாயிலாய்
நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே
(9)
தாவண விடையினாய், தலைமையாக நாள்தொறும்
கோவண உடையினாய், கூடல் ஆலவாயிலாய்
தீவணம் மலர்மிசைத் திசைமுகனும் மாலும் நின்
தூவணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே
(10)
தேற்றமில் வினைத்தொழில் தேரரும் சமணரும்
போற்றிசைத்து நின்கழல் புகழ்ந்து புண்ணியம் கொளார்
கூற்றுதைத்த தாளினாய், கூடல் ஆலவாயிலாய்
நாற்றிசைக்கு மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே
(11)
போயநீர் வளங்கொளும் பொருபுனல் புகலியான்
பாயகேள்வி ஞானசம்பந்தன் நல்ல பண்பினால்
ஆயசொல்லின் மாலைகொண்டு ஆலவாயில் அண்ணலைத்
தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page