திருஆலவாய் (மதுரை) – சம்பந்தர் தேவாரம் (7):

<– திருஆலவாய்

(1)
மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு, சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமைபங்கன் திருஆலவாயான் திருநீறே
(2)
வேதத்தில் உள்ளது நீறு, வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு, புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு, உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே
(3)
முத்தி தருவது நீறு, முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு, தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு, பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு, திருஆலவாயான் திருநீறே
(4)
காண இனியது நீறு, கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு, மதியைத் தருவது நீறு
சேணம் தருவது நீறு, திருஆலவாயான் திருநீறே
(5)
பூச இனியது நீறு, புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு, பெரும் தவத்தோர்களுக்கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு, அந்தமதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு, திருஆலவாயான் திருநீறே
(6)
அருத்தமதாவது நீறு, அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு, வானம் அளிப்பது நீறு
பொருத்தமதாவது நீறு, புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே
(7)
எயிலதட்டது நீறு, இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு, பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு, சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருஆலவாயான் திருநீறே
(8)
இராவணன் மேலது நீறு, எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு, பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு, தத்துவமாவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே
(9)
மாலொடயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றுஎம் ஆலவாயான் திருநீறே
(10)
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண் திகைப்பிப்பது நீறு, கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே
(11)
ஆற்றல்அடல் விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page