திருஆலவாய் (மதுரை) – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருஆலவாய்

(1)
செய்யனே, திருஆலவாய் மேவிய
ஐயனே, அஞ்சல் என்றருள் செய், எனைப்
பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று பாண்டியற்காகவே
(2)
சித்தனே, திருஆலவாய் மேவிய
அத்தனே, அஞ்சல் என்றருள் செய், எனை
எத்தராம் அமணர் கொளுவும் சுடர்
பத்திமன் தென்னன் பாண்டியற்காகவே
(3)
தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
சொக்கனே, அஞ்சல் என்றருள் செய், எனை
எக்கராம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று பாண்டியற்காகவே
(4)
சிட்டனே, திருஆலவாய் மேவிய
அட்ட மூர்த்தியனே, அஞ்சல் என்றருள்
துட்டராம் அமணர் கொளுவும் சுடர்
பட்டிமன் தென்னன் பாண்டியற்காகவே
(5)
நண்ணலார் புர மூன்றெரி ஆலவாய்
அண்ணலே, அஞ்சல் என்றருள் செய், எனை
எண்ணிலா அமணர் கொளுவும் சுடர்
பண்ணியல் தமிழ்ப் பாண்டியற்காகவே
(6)
தஞ்சமென்றுன் சரண் புகுந்தேனையும்
அஞ்சலென்றுருள் ஆலவாய் அண்ணலே
வஞ்சம் செய்தமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன் தென்னன் பாண்டியற்காகவே
(7)
செங்கண் வெள்விடையாய், திருஆலவாய்
அங்கணா, அஞ்சல் என்றருள் செய், எனை
கங்குலார் அமண் கையரிடும் கனல்
பங்கமில் தென்னன் பாண்டியற்காகவே
(8)
தூர்த்தன் வீரம் தொலைத்தருள் ஆலவாய்
ஆத்தனே, அஞ்சல் என்றருள் செய், எனை
ஏத்திலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன் தென்னன் பாண்டியற்காகவே
(9)
தாவினான், அயன் தானறியா வகை
மேவினாய், திருஆலவாயா அருள்
தூவிலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான் தென்னன் பாண்டியற்காகவே
(10)
எண்திசைகெழில் ஆலவாய் மேவிய
அண்டனே, அஞ்சலென்றருள் செய், எனைக்
குண்டராம் அமணர் கொளுவும் சுடர்
பண்டிமன் தென்னன் பாண்டியற்காகவே
(11)
அப்பன் ஆலவாய் ஆதி அருளினால்
வெப்பம் தென்னவன் மேலுற, மேதினிக்கு
ஒப்ப ஞானசம்பந்தன் உரைபத்தும்
செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page