திருஆலவாய் (மதுரை) – சம்பந்தர் தேவாரம் (5):

<– திருஆலவாய்

(1)
வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதமில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே
பாதி மாதுடன் ஆய பரமனே
ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென்
ஆலவாயில் உறையும்எம் ஆதியே
(2)
வைதிகத்தின் வழிஒழுகாத அக்
கைதவம்உடைக் காரமண் தேரரை
எய்தி வாதுசெயத் திருவுள்ளமே
மைதிகழ் தருமா மணிகண்டனே
ஞாலம் நின்புகழே மிக வேண்டும்; தென்
ஆலவாயில் உறையும்எம் ஆதியே
(3)
மறைவழக்கம் இலாத மாபாவிகள்
பறிதலைக் கையர் பாய் உடுப்பார்களை
முறிய வாது செயத் திருவுள்ளமே
மறியுலாம் கையில் மாமழுவாளனே
ஞாலம் நின்புகழே மிக வேண்டும்; தென்
ஆலவாயில் உறையும்எம் ஆதியே
(4)
அறுத்த அங்கம் ஆறாயின நீர்மையைக்
கறுத்தவாழ் அமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து வாது செயத் திருவுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
ஞாலம் நின்புகழே மிக வேண்டும்; தென்
ஆலவாயில் உறையும்எம் ஆதியே
(5)
அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாது செயத் திருவுள்ளமே
வெந்த நீறதணியும் விகிர்தனே
ஞாலம் நின்புகழே மிக வேண்டும்; தென்
ஆலவாயில் உறையும்எம் ஆதியே
(6)
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை
ஓட்டி வாது செயத் திருவுள்ளமே
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே
ஞாலம் நின்புகழே மிக வேண்டும்; தென்
ஆலவாயில் உறையும்எம் ஆதியே
(7)
அழலதோம்பும் அருமறையோர் திறம்
விழலதென்னும் அருகர் திறத்திறம்
கழல வாது செயத் திருவுள்ளமே
தழலிலங்கு திருவுருச் சைவனே
ஞாலம் நின்புகழே மிக வேண்டும்; தென்
ஆலவாயில் உறையும்எம் ஆதியே
(8)
நீற்று மேனியர் ஆயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாது செயத் திருவுள்ளமே
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்
ஞாலம் நின்புகழே மிக வேண்டும்; தென்
ஆலவாயில் உறையும்எம் ஆதியே
(9)
நீலமேனி அமணர் திறத்துநின்
சீலம் வாது செயத் திருவுள்ளமே
மாலும் நான்முகனும் காண்பரியதோர்
கோல மேனியதாகிய குன்றமே
ஞாலம் நின்புகழே மிக வேண்டும்; தென்
ஆலவாயில் உறையும்எம் ஆதியே
(10)
அன்று முப்புரம் செற்ற அழக,நின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்ற வாது செயத் திருவுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞாலம் நின்புகழே மிக வேண்டும்; தென்
ஆலவாயில் உறையும்எம் ஆதியே
(11)
கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச் சம்பந்தன் மதித்தஇப்
பாடல் வல்லவர் பாக்கியவாளரே
.

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page