திருஆலவாய் (மதுரை) – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருஆலவாய்

(1)
நீலமா மிடற்று ஆலவாயிலான்
பாலதாயினார் ஞாலம் ஆள்வரே
(2)
ஞாலம் ஏழுமாம் ஆலவாயிலார்
சீலமே சொலீர் காலன் வீடவே
(3)
ஆல நீழலார் ஆலவாயிலார்
கால காலனார் பாலதாமினே
(4)
அந்தமில் புகழ் எந்தை ஆலவாய்
பந்தியார் கழல் சிந்தை செய்ம்மினே
(5)
ஆடலேற்றினான் கூடல் ஆலவாய்
பாடியே மனம் நாடி வாழ்மினே
(6)
அண்ணல் ஆலவாய் நண்ணினான் தனை
எண்ணியே தொழத் திண்ணம் இன்பமே
(7)
அம்பொன் ஆலவாய் நம்பனார் கழல்
நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே
(8)
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய்
உரைக்கும் உள்ளத்தார்க்கு இரக்கம் உண்மையே
(9)
அருவன் ஆலவாய் மருவினான் தனை
இருவர் ஏத்த நின்றுருவம் ஓங்குமே
(10)
ஆர நாகமாம் சீரன் ஆலவாய்த்
தேரமண் செற்ற வீரம் என்பரே
(11)
அடிகள் ஆலவாய்ப் படிகொள் சம்பந்தன்
முடிவில் இன்தமிழ் செடிகள் நீக்குமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page