(1)
காட்டுமா அதுரித்துரி போர்த்துடல்
நாட்ட மூன்றுடையாய், உரை செய்வன்நான்
வேட்டு வேள்வி செய்யா அமண் கையரை
ஓட்டி வாது செயத் திருவுள்ளமே
(2)
மத்த யானையின் ஈருரி மூடிய
அத்தனே, அணி ஆலவாயாய், பணி
பொய்த்தவன் தவவேடத்தராம் சமண்
சித்தரை அழிக்கத் திருவுள்ளமே
(3)
மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத் திருஆலவாயா அருள்
பெண்ணகத்தெழில் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே
(4)
ஓதியோத்தறியா அமணாதரை
வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே
ஆதியே திருஆலவாய் அண்ணலே
நீதியாக நினைந்தருள் செய்திடே
(5)
வையமார் புகழாய், அடியார் தொழும்
செய்கையார், திருஆலவாயாய் செப்பாய்
கையிலுண்டுழலும் அமண் கையரைப்
பைய வாது செயத் திருவுள்ளமே
(6)
நாறு சேர்வயல் தண்டலை மிண்டிய
தேறலார் திருஆலவாயாய் செப்பாய்
வீறிலாத் தவமோட்டு அமண் வேடரைச்
சீறி வாது செயத் திருஉள்ளமே
(7)
பண்டடித் தவத்தார் பயில்வார் தொழும்
தொண்டருக்கெளியாய், திருஆலவாய்
அண்டனே, அமண் கையரை வாதினில்
செண்டடித்துளறத் திருவுள்ளமே
(8)
அரக்கன் தான் கிரியேற்றவன் தன்முடிச்
செருக்கினைத் தவிர்த்தாய், திருஆலவாய்ப்
பரக்கு மாண்புடையாய், அமண் பாவரைக்
கரக்க வாது செயத் திருவுள்ளமே
(9)
மாலும் நான்முகனும் அறியா நெறி
ஆலவாய் உறையும் அண்ணலே, பணி
மேலை வீடுணரா வெற்றரையரைச்
சால வாது செயத் திருவுள்ளமே
(10)
கழிக்கரைப்படும் மீன் கவர்வார், அமண்
அழிப்பரை அழிக்கத் திருவுள்ளமே
தெழிக்கும் பூம்புனல் சூழ் திருஆலவாய்
மழுப்படை உடை மைந்தனே நல்கிடே
(11)
செந்தெனா முரலும் திருஆலவாய்
மைந்தனே என்று வல்லமண் ஆசறச்
சந்தமார் தமிழ் கேட்ட மெய்ஞ்ஞான !சம்
பந்தன் சொல் பகரும் பழி நீங்கவே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...