திருஆலவாய் (மதுரை) – அப்பர் தேவாரம் (2):

<– திருஆலவாய்

(1)
வேதியா வேத கீதா, விண்ணவர் அண்ணா என்றென்று
ஓதியே மலர்கள் தூவி, ஒருங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய், படர்சடை மதியஞ்சூடும்
ஆதியே, ஆலவாயில் அப்பனே அருள் செயாயே
(2)
நம்பனே நான்முகத்தாய், நாதனே ஞானமூர்த்தீ
என்பொனே ஈசா என்றென்றேத்தி நான் ஏசற்றென்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே, ஆலவாயில் அப்பனே அருள் செயாயே
(3)
ஒருமருந்தாகி உள்ளாய், உம்பரோடுலகுக்கெல்லாம்
பெருமருந்தாகி நின்றாய், பேரமுதின் சுவையாய்க்
கருமருந்தாகி உள்ளாய், ஆளும் வல்வினைகள் தீர்க்கும்
அருமருந்து ஆலவாயில் அப்பனே, அருள் செயாயே
(4)
செய்யநின் கமல பாதம் சேருமா தேவர் தேவே
மையணி கண்டத்தானே, மான்மறி மழுவொன்றேந்தும்
சைவனே, சால ஞானம் கற்றறிவிலாத நாயேன்
ஐயனே, ஆலவாயில் அப்பனே அருள் செயாயே
(5)
வெண்தலை கையிலேந்தி, மிகவுமூர் பலி கொண்டென்றும்
உண்டதுமில்லை, சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப் பளகனேன் உளமதார
அண்டனே, ஆலவாயில் அப்பனே அருள் செயாயே
(6)
எஞ்சலில் புகலிதென்றென்று ஏத்திநான் ஏசற்றென்றும்
வஞ்சகம் ஒன்றுமின்றி மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருள் பதமே, நாயேற்கு
அஞ்சலென்று ஆலவாயில் அப்பனே அருள் செயாயே
(7)
வழுவிலாதுன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன்உன்
செழுமலர்ப் பாதம் காணத் தெண்திரை நஞ்சமுண்ட
குழகனே கோலவில்லீ கூத்தனே, மாத்தாய் உள்ள
அழகனே, ஆலவாயில் அப்பனே அருள் செயாயே
(8)
நறுமலர் நீரும் கொண்டு நாள்தொறும் ஏத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா, மாமறை அங்கம்ஆறும்
அறிவனே, ஆலவாயில் அப்பனே அருள் செயாயே
(9)
நலந்திகழ் வாயின் நூலால் சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரசதாள அருளினாய் என்று திண்ணம்
கலந்துடன் வந்து நின்தாள் கருதி நான் காண்பதாக
அலந்தனன்  ஆலவாயில் அப்பனே அருள் செயாயே
(10)
பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையில் புந்தியொன்றிப்
பிடித்து நின்தாள்கள் என்றும் பிதற்றிநான் இருக்க மாட்டேன்
எடுப்பனென்று இலங்கைக் கோன் வந்தெடுத்தலும் இருபது தோள்
அடர்த்தனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page