(1)
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிரும் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள்
வளைத்தானை, வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகி மா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தால் துவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோடு ஆடித்
திளைத்தானைத், தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே
(2)
விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை
மேலாடு புரமூன்றும் பொடிசெய்தானைப்
பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத்தானைப்
பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற்றானை
உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கையாளைக்
கரந்துமையோடு உடனாகி இருந்தான் தன்னைத்
தெண்ணிலவு தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே
(3)
நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித்தானை
நிலமருவி நீரோடக் கண்டான் தன்னைப்
பால்திரளைப் பயின்றாட வல்லான் தன்னைப்
பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் தன்னைக்
கால்திரளாய் மேகத்தின் உள்ளே நின்று
கடுங்குரலால் இடிப்பானைக், கண்ணோர் நெற்றித்
தீத்திரளைத், தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே
(4)
வானமிது எல்லாம் உடையான் தன்னை
வரிஅரவக் கச்சானை, வன்பேய் சூழக்
கானமதில் நடமாட வல்லான் தன்னைக்
கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என்மேல்
ஊனமது எல்லாம் ஒழித்தான் தன்னை
உணர்வாகி அடியேனதுள்ளே நின்ற
தேனமுதைத், தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே
(5)
ஊரானை, உலகேழாய் நின்றான் தன்னை
ஒற்றைவெண் பிறையானை, உமையோடென்றும்
பேரானைப், பிறர்க்கென்றும் அரியான் தன்னைப்
பிணக்காட்டில் நடமாடல் பேயோடென்றும்
ஆரானை, அமரர்களுக்கமுதீந்தானை
அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும்
சீரானைத், தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே
(6)
மூவனை மூர்த்தியை, மூவா மேனி
உடையானை, மூவுலகும் தானேயெங்கும்
பாவனைப், பாவம் அறுப்பான் தன்னைப்
படிஎழுதலாகாத மங்கையோடு
மேவனை, விண்ணோர் நடுங்கக் கண்டு
விரிகடலின் நஞ்சுண்டு அமுதமீந்த
தேவனைத், தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே
(7)
துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைத்
துன்பம் துடைத்தாள வல்லான் தன்னை
இறந்தார்கள் என்பே அணிந்தான் தன்னை
எல்லி நடமாட வல்லான் தன்னை
மறந்தார் மதில்மூன்றும் மாய்த்தான் தன்னை
மற்றொரு பற்றில்லா அடியேற்கென்றும்
சிறந்தானைத், தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே
(8)
வாயானை மனத்தானை, மனத்துள் நின்ற
கருத்தானைக், கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத், தூவெள்ளை ஏற்றான் தன்னைச்
சுடர்த்திங்கள் சடையானைத், தொடர்ந்து நின்றென்
தாயானைத், தவமாய தன்மையானைத்
தலையாய தேவாதி தேவர்க்கென்றும்
சேயானைத், தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே
(9)
பகைச்சுடராய்ப் பாவம் அறுப்பான் தன்னைப்
பழியிலியாய் நஞ்சுண்டு அமுதீந்தானை
வகைச்சுடராய் வல்லசுரர் புரம்அட்டானை
வளைவிலியாய் எல்லார்க்கும் அருள் செய்வானை
மிகைச்சுடரை, விண்ணவர்கள் மேலப்பாலை
மேலாய தேவாதி தேவர்க்கென்றும்
திகைச்சுடரைத், தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே
(10)
மலையானை, மாமேரு மன்னினானை
வளர்புன் சடையானை, வானோர் தங்கள்
தலையானை, என்தலையின் உச்சி என்றும்
தாபித்திருந்தானைத், தானேயெங்கும்
துலையாக ஒருவரையும் இல்லாதானைத்
தோன்றாதார் மதில்மூன்றும் துவள எய்த
சிலையானைத், தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே
(11)
தூர்த்தனைத் தோள்முடி பத்திறுத்தான் தன்னைத்
தொல்நரம்பின் இன்னிசை கேட்டருள் செய்தானைப்
பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் தன்னைப்
பரிந்தவற்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை
ஆத்தனை அடியேனுக்கன்பன் தன்னை
அளவிலாப் பல்லூழி கண்டு நின்ற
தீர்த்தனைத், தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...