திருஆமாத்தூர் – சுந்தரர் தேவாரம்:

<– திருஆமாத்தூர்

(1)
காண்டனன் காண்டனன் காரிகையாள் தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்தூர் எம் அடிகட்காள்
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று சொல்லுவன் கேண்மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித்து அல்லாதவர்கட்கே
(2)
பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றிநான்
தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளைக்
கூடுவன் கூடுவன் குற்றமதற்றென் குறிப்பொடே
(3)
காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழலால்அன்று காமனைப்
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தினால்அன்று கூற்றத்தை
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத்தூர் எம் அடிகளார்
ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பிராட்டியைப் பாகமே
(4)
ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்ளே நின்ற ஒண்பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றியூர் புக்குச்
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்தோள் தடமுலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருளதே
(5)
வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களைச்
சென்றவன் சென்றவன் சில்பலிக்கென்று தெருவிடை
நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர் தங்கள்பால்
அன்றவன் அன்றவன் செய்யருள் ஆமாத்தூர் ஐயனே
(6)
காண்டவன் காண்டவன் காண்டற்கரிய கடவுளாய்
நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்தூரையும் எனையும்ஆட்
பூண்டவன் பூண்டவன் மார்பில் புரிநூல் புரளவே
(7)
எண்ணவன் எண்ணவன் ஏழுலகத்துயிர் தங்கட்குக்
கண்ணவன் கண்ணவன் காண்டும் என்பாரவர் தங்கட்குப்
பெண்ணவன் பெண்ணவன் மேனியொர் பாகமாம் பிஞ்ஞகன்
அண்ணவன் அண்ணவன் ஆமாத்தூர்எம் அடிகளே
(8)|
பொன்னவன் பொன்னவன் பொன்னைத் தந்தென்னைப் போகவிடா
மின்னவன் மின்னவன் வேதத்தின் உட்பொருளாகிய
அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன் என் மனத்தின்புற்றிருப்பனே
(9)
தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாள்தொறும்
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயொர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளே
(10)
உற்றனன் உற்றவர் தம்மை ஒழிந்துள்ளத்துள் பொருள்
பற்றினன் பற்றினன் பங்கயச் சேவடிக்கே செல்ல
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயான் அடியார்கட்காள்
பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே
(11)
ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொருளான விமலனை
மையனை மையணி கண்டனை வன்தொண்டன் ஊரன்சொல்
பொய்யொன்றும் இன்றிப் புலம்புவார் பொற்கழல் சேர்வரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page