திருஆமாத்தூர் – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருஆமாத்தூர்

(1)
குன்ற வார்சிலை, நாணராஅரி வாளி கூரெரி காற்றின் மும்மதில்
வென்றவாறெங்ஙனே விடையேறும் வேதியனே
தென்றலார் மணிமாட மாளிகை சூளிகைக்கெதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே
(2)
பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம்
வெருவ உண்டுகந்த அருளென் கொல் விண்ணவனே
கரவின் மாமணி பொன் கொழித்திழி சந்து காரகில் தந்து பம்பைநீர்
அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே
(3)
நீண்ட வார்சடை தாழ, நேரிழை பாட, நீறுமெய் பூசி, மாலயன்
மாண்ட வார்சுடலை நடமாடு மாண்பதுஎன்
பூண்ட கேழல் மருப்பரா விரிகொன்றை வாள்வரி ஆமை பூணென்
ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே
(4)
சேலின் நேரன கண்ணி வெண்ணகை மான்விழித் திருமாதைப் பாகம்வைத்து
ஏல மாதவ நீமுயல்கின்ற வேடம்இதென்
பாலினேர் மொழி மங்கைமார் நடமாடி இன்னிசை பாட நீள்பதி
ஆலைசூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே
(5)
தொண்டர் வந்து வணங்கி, மாமலர் தூவி, நின்கழலேத்துவார் அவர்
உண்டியால் வருந்த இரங்காததென்னை கொலாம்
வண்டலார் கழனிக் கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாண்முகம்
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே
(6)
ஓதி ஆரணமாய நுண்பொருள் அன்று நால்வர்முன் கேட்க, நன்னெறி
நீதி ஆலநீழல் உரைக்கின்ற நீர்மை அதென்
சோதியே சுடரே, சுரும்பமர் கொன்றையாய், திருநின்றியூர்உறை
ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே
(7)
மங்கை வாள்நுதல் மான் மனத்திடை வாடிஊட மணங்கமழ் சடைக்
கங்கையாள் இருந்த கருத்தாவது என்னை கொலாம்
பங்கய மதுவுண்டு வண்டிசை பாட மாமயிலாட விண்முழவு
அங்கையால் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே
(8)
நின்றடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ண நினைந்துளத்திடை
வென்றடர்த்து ஒருபால் மடமாதை விரும்புதல்என்
குன்றெடுத்த நிசாசரன் திரள் தோளிருபது தான் நெரிதர
அன்றடர்த்துகந்தார் ஆமாத்தூர் அம்மானே
(9)
செய்ய தாமரை மேலிருந்தவனோடு மால் அடிதேட, நீள்முடி
வெய்ய வாரழலாய் நிமிர்கின்ற வெற்றிமைஎன்
தையலாளொடு பிச்சைக்கிச்சை, தயங்குதோல் அரையார்த்த வேடம் கொண்டு
ஐயம் ஏற்றுகந்தார் ஆமாத்தூர் அம்மானே
(10)
புத்தர் புன்சமணாதர் பொய்ம்மொழி நூல் பிடித்துஅலர் தூற்ற, நின்னடி
பத்தர் பேண நின்ற பரமாய பான்மைஅதென்
முத்தை வென்ற முறுவலாள் உமைபங்கன் என்றிமையோர் பரவிடும்
அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே
(11)
வாடல் வெண்தலை மாலை ஆர்த்து மயங்கிருள் எரியேந்தி மாநடம்
ஆடல் மேயதென் என்று ஆமாத்தூர் அம்மானைக்
கோடல்நாகம் அரும்பு பைம்பொழில் கொச்சையார்இறை ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page