திருஆமாத்தூர் – அப்பர் தேவாரம் (1):

<– திருஆமாத்தூர்

(1)
மாமாத்தாகிய மாலயன் மால் கொடு
தாமாத் தேடியும் காண்கிலர் தாள்முடி
ஆமாத்தூர் அரனே அருளாய் என்றென்று
ஏமாப்பெய்திக் கண்டார் இறையானையே
(2)
சந்தியானைச், சமாதி செய்வார் தங்கள்
புந்தியானைப், புத்தேளிர் தொழப்படும்
அந்தியானை, ஆமாத்தூர் அழகனைச்
சிந்தியாதவர் தீவினையாளரே
(3)
காமாத்தம் எனும் கார் வலைப்பட்டு நான்
போமாத்தை அறியாது புலம்புவேன்
ஆமாத்தூர் அரனே என்றழைத்தலும்
தேமாத் தீங்கனி போலத் தித்திக்குமே
(4)
பஞ்ச பூத வலையில் படுவதற்கு
அஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை
நெஞ்சினால் நினைந்தேன், நினைவெய்தலும்
வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே
(5)
குராமன்னும் குழலாள் ஒரு கூறனார்
அராமன்னும் சடையான் திருஆமாத்தூர்
இராமனும் வழிபாடு செய் ஈசனை
நிராமயன் தனை நாளும் நினைமினே
(6)
பித்தனைப், பெருந்தேவர் தொழப்படும்
அத்தனை, அணி ஆமாத்தூர் மேவிய
முத்தினை, அடியேன் உள் முயறலும்
பத்தி வெள்ளம் பரந்தது காண்மினே
(7)
நீற்றினார் திருமேனியன், நேரிழை
கூற்றினான், குழற்கோலச் சடையிலோர்
ஆற்றினான், அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றினான் எமை ஆளுடை ஈசனே
(8)
பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு
அண்ணித்தாகும் அமுதினை ஆமாத்தூர்
சண்ணிப்பானைத், தமர்க்கு அணித்தாயதோர்
கண்ணில் பாவையன் ஆனவன் காண்மினே
(9)
குண்டர் பீலிகள் கொள்ளும் குணமிலா
மிண்டரோடு எனை வேறுபடுத்துய்யக்
கொண்ட நாதன், குளிர்புனல் வீரட்டத்து
அண்டனார் இடம் ஆமாத்தூர் காண்மினே
(10)
வானம் சாடு மதிஅரவத்தொடு
தான்அஞ்சாதுடன் வைத்த சடையிடைத்
தேனஞ்சாடிய தெங்கிள நீரொடும்
ஆனஞ்சாடிய ஆமாத்தூர் ஐயனே
(11)
விடலையாய் விலங்கல் எடுத்தான்முடி
அடரவோர் விரலூன்றிய ஆமாத்தூர்
இடமதாக் கொண்ட ஈசனுக்கு என்னுளம்
இடமதாகக் கொண்டு இன்புற்றிருப்பனே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page