(1)
மறைகளாயின நான்கும், மற்றுள பொருள்களும் எல்லாத்
துறையும், தோத்திரத்திறையும் தொன்மையும் நன்மையுமாய
அறையும் பூம்புனல் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே
(2)
வங்கம் மேவிய வேலை நஞ்செழ, வஞ்சர்கள் கூடித்
தங்கள் மேல் அடராமை உண்ணென உண்டிருள் கண்டன்
அங்கம் ஓதிய ஆனைக்காவுடை ஆதியை நாளும்
எங்கள் ஈசன் என்பார்கள் எம்மையும் ஆளுடையாரே
(3)
நீல வண்டறை கொன்றை நேரிழை மங்கை, ஓர்திங்கள்
சால வாள் அரவங்கள் தங்கிய செஞ்சடை எந்தை
ஆல நீழலுள் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
ஏலுமாறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே
(4)
தந்தை தாய் உலகுக்கோர் தத்துவன், மெய்த் தவத்தோர்க்குப்
பந்தமாயின பெருமான், பரிசுடையவர் திருஅடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே
(5)
கணை செந்தீ அரவம்நாண் கல்வளையும் சிலையாகத்
துணை செயும்மதில் மூன்றும் சுட்டவனே உலகுய்ய
அணையும் பூம்புனல் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே
(6)
விண்ணின் மாமதி சூடி, விலையிலி கலனணி விமலன்
பண்ணின் நேர்மொழி மங்கை பங்கினன், பசுஉகந்தேறி
அண்ணலாகிய ஆனைக்காவுடை ஆதியை நாளும்
எண்ணுமாறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே
(7)
தாரமாகிய பொன்னித் தண்துறை ஆடி விழுத்து
நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே
ஆரங்கொண்ட எம்ஆனைக்காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே
(8)
உரவம் உள்ளதொர் உழையின் உரிபுலியதள் உடையானை
விரைகொள் கொன்றையினானை, விரிசடை மேல்பிறையானை
அரவம் வீக்கிய ஆனைக்காவுடை ஆதியை நாளும்
இரவும் எல்லியும் ஏத்துவார் எம்மை ஆளுடையாரே
(9)
வலங்கொள்வார் அவர்தங்கள் வல்வினை தீர்க்கு மருந்து
கலங்கக் காலனைக் காலால், காமனைக் கண்சிவப்பானை
அலங்கல் நீர்பொரும் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே
(10)
ஆழியாற்கருள் ஆனைக்காவுடை ஆதி பொன்னடியின்
நீழலே சரணாக நின்றருள் கூர நினைந்து
வாழவல்ல வன்தொண்டன் வண்தமிழ் மாலை வல்லார்போய்
ஏழுமா பிறப்பற்று எம்மையும் ஆளுடையாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...