திருஆனைக்கா – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருஆனைக்கா

(1)
மழையார் மிடறா, மழுவாள் உடையாய்
உழையார் கரவா, உமையாள் கணவா
விழவாரும் வெண்நாவலின் மேவியஎம்
அழகா, எனும் ஆயிழையாள் அவளே
(2)
கொலையார் கரியின் உரிமூடியனே
மலையார் சிலையா வளைவித்தவனே
விலையால் எனையாளும் வெண்நாவல் உளாய்
நிலையா அருளாய் எனும் நேரிழையே
(3)
காலால் உயிர் காலனை வீடு செய்தாய்
பாலோடு நெய்யாடிய பால்வணனே
வேலாடு கையாய், எம் வெணாவல்உளாய்
ஆலார் நிழலாய் எனும் ஆயிழையே
(4)
சுறவக் கொடி கொண்டவன் நீறதுவாய்
உற நெற்றிவிழித்த எம்உத்தமனே
விறல் மிக்க கரிக்கு அருள் செய்தவனே
அறமிக்கது என்னும்என் ஆயிழையே
(5)
செங்கண் பெயர்கொண்டவன் செம்பியர்கோன்
அங்கண் கருணை பெரிதாயவனே
வெங்கண் விடையாய், எம் வெண்நாவல் உளாய்
அங்கத்தயர்வாயினள் ஆயிழையே
(6)
குன்றே அமர்வாய், கொலையார் புலியின்
தன் தோலுடையாய், சடையாய் பிறையாய்
வென்றாய் புரமூன்றை, வெண்நாவல் உளாய்
நின்றாய் அருளாய் எனும் நேரிழையே
(7)
(8)
மலை அன்றெடுத்த அரக்கன் முடிதோள்
தொலையவ் விரலூன்றிய தூமழுவா
விலையால் எனையாளும் வெண்நாவல்உளாய்
அலசாமல் நல்காய் எனும் ஆயிழையே
(9)
திருவார்தரு நாரணன் நான்முகனும்
மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
விரையாரும் வெண்நாவலுள் மேவியஎம்
அரவா எனும் ஆயிழையாள் அவளே
(10)
புத்தர் பலரோடு அமண் பொய்த்தவர்கள்
ஒத்தவ்வுரை சொல் இவை ஓரகிலார்
மெய்த்தேவர் வணங்கும் வெண்நாவல்உளாய்
அத்தா அருளாய் எனும் ஆயிழையே
(11)
வெண்நாவல் அமர்ந்துறை வேதியனைக்
கண்ணார் கமழ் காழியர் தம் தலைவன்
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார்
விண்ணோர் அவர் ஏத்த விரும்புவரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page