(1)
மண்ணது உண்ட அரி மலரோன் காணா
வெண்ணாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணது ஓங்கிய கயிலையாரும்
அண்ணல் ஆரூர் ஆதிஆனைக்காவே
(2)
வந்து மால் அயனவர் காண்பரியார்
வெந்த வெண்ணீறணி மயேந்திரரும்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தண் ஆரூர்ஆதி ஆனைக்காவே
(3)
மாலயன் தேடிய மயேந்திரரும்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
வேலையது ஓங்கும் வெண்ணாவலாரும்
ஆலை ஆரூர்ஆதி ஆனைக்காவே
(4)
கருடனை ஏறரி அயனோர் காணார்
வெருள் விடையேறிய மயேந்திரரும்
கருதரு கண்டத்தெம் கயிலையாரும்
அருளன் ஆரூர்ஆதி ஆனைக்காவே
(5)
மதுசூதன் நான்முகன் வணங்கரியார்
மதியது சொல்லிய மயேந்திரரும்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியன் ஆரூர்ஆதி ஆனைக்காவே
(6)
சக்கரம் வேண்டுமால் பிரமன் காணா
மிக்கவர் கயிலை மயேந்திரரும்
தக்கனைத் தலைஅரி தழலுருவர்
அக்கணியவர் ஆரூர் ஆனைக்காவே
(7)
கண்ணனும் நான்முகன் காண்பரியார்
வெண்ணாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணப்பர்க்கருள் செய்த கயிலைஎங்கள்
அண்ணல் ஆரூர்ஆதி ஆனைக்காவே
(8)
கடல் வண்ணன் நான்முகன் காண்பரியார்
தடவரை அரக்கனைத் தலைநெரித்தார்
விடமது உண்டஎம் மயேந்திரரும்
அடல்விடை ஆரூர்ஆதி ஆனைக்காவே
(9)
ஆதிமால் அயனவர் காண்பரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்
காதிலொர் குழையுடைக் கயிலையாரும்
ஆதி ஆரூர்எந்தை ஆனைக்காவே
(10)
அறிவில் அமண் புத்தர் அறிவு கொள்ளேல்
வெறிய மான் கரத்து ஆரூர் மயேந்திரரும்
மறிகடலோன் அயன் தேடத்தானும்
அறிவரு கயிலையோன் ஆனைக்காவே
(11)
ஏனமால் அயனவர் காண்பரியார்
கானமார் கயிலைநன் மயேந்திரரும்
ஆனஆரூர் ஆதி ஆனைக்காவை
ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...