திருஅன்னியூர் – அப்பர் தேவாரம்:

<– திருஅன்னியூர்

(1)
பாறலைத்த படுவெண் தலையினன்
நீறலைத்த செம்மேனியன், நேரிழை
கூறலைத்த மெய், கோளரவாட்டிய
ஆறலைத்த சடை அன்னியூரனே
(2)
பண்டொத்த மொழியாளைஓர் பாகமாய்
இண்டைச் செஞ்சடையன், இருள் சேர்ந்ததோர்
கண்டத்தன், கரியின்உரி போர்த்தவன்
அண்டத்தப்புறத்தான் அன்னியூரனே
(3)
பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவையாகத் துடைப்பவர் தம்மிடம்
குரவம் நாறும் குழலுமை கூறராய்
அரவம் ஆட்டுவர் போல் அன்னியூரரே
(4)
வேத கீதர், விண்ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
நாதர், நீதியினால் அடியார் தமக்கு
ஆதியாகி நின்றார் அன்னியூரரே
(5)
எம்பிரான் இமையோர்கள் தமக்கெலாம்
இன்பராகி இருந்தஎம் ஈசனார்
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்கு
அன்பராகி நின்றார் அன்னியூரரே
(6)
வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்
கந்த மாமலர் சூடும் கருத்தினர்
சிந்தையார் சிவனார், செய்ய தீவண்ணர்
அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே
(7)
ஊனையார் தலையில் பலி !கொண்டுழல்
வானை; வானவர் தாங்கள் வணங்கவே
தேனையார் குழலாளைஓர் பாகமா
ஆனை ஈருரியார் அன்னியூரரே
(8)
காலை போய்ப் பலி தேர்வர், கண்ணார் நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ் புறங்காடு அரங்காகவே
ஆலின் கீழ் அறத்தார் அன்னியூரரே
(9)
எரிகொள் மேனியர், என்பணிந்து இன்பராய்த்
திரியும் மூவெயில் தீயெழச் செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்கு
அரியராகி நின்றார் அன்னியூரரே
(10)
வஞ்சரக்கன் கரமும் சிரத்தொடும்
அஞ்சும் அஞ்சுமோர் ஆறுநான்குமிறப்
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆயிழை
அஞ்சல் அஞ்சலென்றார் அன்னியூரரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page