திருஅஞ்சைக்களம் – சுந்தரர் தேவாரம் (2):

<– திருஅஞ்சைக்களம்

(1)
தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே
    சடைமேல் கங்கை வெள்ளம் தரித்ததென்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்ததென்னே
    அதன்மேல் கதநாகம் கச்சார்த்ததென்னே
மலைக்கும் நிகரொப்பன வன்திரைகள்
    வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்டு
அலைக்கும் கடலங்கரை மேல் மகோதை
    அணியார்பொழில் அஞ்சைக்களத்தப்பனே
(2)
பிடித்தாட்டிஓர் நாகத்தைப் பூண்டதென்னே
    பிறங்கும் சடைமேல் பிறை சூடிற்றென்னே
பொடித்தான் கொண்டு மெய்முற்றும் பூசிற்றென்னே
    புகரேறு உகந்தேறல் புரிந்ததென்னே
மடித்தோட்டந்து வன்திரை எற்றியிட
    வளர்சங்கம் அங்காந்து முத்தம் சொரிய
அடித்தார் கடலங்கரை மேல் மகோதை
    அணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே
(3)
சிந்தித்தெழுவார்க்கு நெல்லிக்கனியே
    சிறியார் பெரியார் மனத்தேறலுற்றால்
முந்தித் தொழுவார் இறவார் பிறவார்
    முனிகள் முனியே அமரர்க்கமரா
சந்தித் தடமால் வரைபோல் திரைகள்
    தணியாதிடறும் கடலங்கரைமேல்
அந்தித் தலைச் செக்கர்வானே ஒத்தியால்
    அணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே
(4)
இழைக்கும் எழுத்துக்குயிரே ஒத்தியால்
    இலையே ஒத்தியால், உளையே ஒத்தியால்
குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால்
    அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால்
மழைக்கு நிகரொப்பன வன்திரைகள்
    வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அழைக்கும் கடலங்கரை மேல் மகோதை
    அணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே
(5)
வீடின் பயனென், பிறப்பின் பயனென்
    விடையேறுவதென், மதயானை நிற்கக்
கூடும் மலைமங்கை ஒருத்தியுடன்
    சடைமேல் கங்கையாளை நீ சூடிற்றென்னே
பாடும் புலவர்க்கருளும் பொருளென்
    நெதியம் பலசெய்த கலச்செலவின்
ஆடும் கடலங்கரை மேல் மகோதை
    அணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே
(6)
இரவத்திடுகாட்டெரி ஆடிற்றென்னே
    இறந்தார் தலையில் பலி கோடலென்னே
பரவித் தொழுவார் பெறு பண்டம்என்னே
    பரமா பரமேட்டி பணித்தருளாய்
உரவத்தொடு சங்கமொடிப்பி முத்தம்
    கொணர்ந்தெற்றி முழங்கி வலம்புரிகொண்டு
அரவக் கடலங்கரை மேல் மகோதை
    அணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே
(7)
ஆக்கும் அழிவும் ஐய நீஎன்பன் நான்
    சொல்லுவார் சொற்பொருள் அவைநீ என்பன்நான்
நாக்கும் செவியும் கண்ணும்நீ என்பன்நான்
    நலனே இனிநான் உனை நன்குணர்ந்தேன்
நோக்கும் நெதியம் பல எத்தனையும்
    கலத்தில் புகப்பெய்து கொண்டேற நுந்தி
ஆர்க்கும் கடலங்கரை மேல் மகோதை
    அணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே
(8)
வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்
    விளங்கும் குழைக் காதுடை வேதியனே
இறுத்தாய் இலங்கைக்கிறையாயவனைத்
    தலை பத்தொடு தோள்பல இற்றுவிழக்
கறுத்தாய் கடல் நஞ்சமுதுண்டு கண்டம்
    கடுகப் பிரமன் தலை ஐந்திலும்ஒன்று
அறுத்தாய், கடலங்கரை மேல் மகோதை
    அணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே
(9)
பிடிக்குக் களிறே ஒத்தியால் எம்பிரான்
    பிரமற்கும் பிரான், மற்றை மாற்கும் பிரான்
நொடிக்கும் அளவில் புரம் மூன்றெரியச்
    சிலை தொட்டவனே, உனை நான்மறவேன்
வடிக்கின்றன போல் சில வன்திரைகள்
    வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்டு
அடிக்கும் கடலங்கரை மேல் மகோதை
    அணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே
(10)
எந்தம் அடிகள் இமையோர் பெருமான்
    எனக்கென்றும் அளிக்கும் மணிமிடற்றன்
அந்தண் கடலங்கரை மேல் மகோதை
    அணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனை
மந்தம் முழவும் குழலும் இயம்பும்
    வளர் நாவலர்கோன் நம்பி ஊரன் சொன்ன
சந்தம்மிகு தண்தமிழ் மாலைகள் கொண்டு
    அடிவீழ வல்லார் தடுமாற்றிலரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page