திருஅஞ்சைக்களம் – சுந்தரர் தேவாரம் (1):

<– திருஅஞ்சைக்களம்

(1)
முடிப்பது கங்கையும் திங்களும், செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெழக் கணை நூறினார்
கடிப்பதும் ஏறுமென்றஞ்சுவன், திருக்கைகளால்
பிடிப்பது பாம்பன்றி இல்லையோ எம் பிரானுக்கே
(2)
தூறன்றி ஆடரங்கில்லையோ, சுடலைப் பொடி
நீறன்றிச் சாந்த மற்றில்லையோ, இமவான் மகள்
கூறன்றிக் கூறாவதில்லையோ, கொல்லைச் சில்லைவெள்
ஏறன்றி ஏறுவதில்லையோ எம் பிரானுக்கே
(3)
தட்டெனும் தட்டெனும் தொண்டர்காள் தடுமாற்றத்தை
ஒட்டெனும் ஒட்டெனும் மாநிலத்துயிர் கோறலைச்
சிட்டன் திரிபுரம் சுட்ட தேவர்கள் தேவனை
வெட்டெனப் பேசன்மின் தொண்டர்காள் எம் பிரானையே
(4)
நரிதலை கவ்வ நின்றோரி கூப்பிட, நள்ளிருள்
எரிதலைப் பேய்புடை சூழ, வாரிருள் காட்டிடைச்
சிரிதலை மாலை சடைக்கணிந்த எம்செல்வனைப்
பிரிதலைப் பேசன்மின் தொண்டர்காள் எம் பிரானையே
(5)
வேயன தோளி மலைமகளை விரும்பிய
மாயமில் மாமலை நாடனாகிய மாண்பனை
ஆயன சொல்லி நின்றார்கள் அல்லல் அறுக்கினும்
பேயனே பித்தனே என்பரால் எம் பிரானையே
(6)
இறைவன் என்றெம்பெருமானை வானவர் ஏத்தப் போய்த்
துறையொன்றித் தூமலரிட்டடியிணை போற்றுவார்
மறையன்றிப் பாடுவதில்லையோ, மல்கு வானிளம்
பிறையன்றிச் சூடுவதில்லையோ எம் பிரானுக்கே
(7)
தாரும் தண்கொன்றையும் கூவிளம் தனிமத்தமும்
ஆரும் அளவறியாத ஆதியும் அந்தமும்
ஊரும் ஒன்றில்லை உலகெலாம் உகப்பார், தொழப்
பேரும் ஓராயிரம் என்பரால் எம் பிரானுக்கே
(8)
அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
புரிதரு புன்சடை வைத்தஎம் புனிதற்கினி
எரியன்றி அங்கைக்கொன்றில்லையோ எம் பிரானுக்கே
(9)
கரிய மனச் சமண் காடியாடு கழுக்களால்
எரிய வசவுணும் தன்மையோ, இமவான் மகள்
பெரிய மனம் தடுமாற வேண்டிப் பெம்மான் மதக்
கரியின் உரிஅல்லதில்லையோ எம் பிரானுக்கே
(10)
காய்சின மால்விடை மாணிக்கத்தெம் கறைக்கண்டத்து
ஈசனை, ஊரன் எட்டோடிரண்டு விரும்பிய
ஆயின சீர்ப்பகை ஞானிஅப்பன், அடித் தொண்டன்தான்
ஏசின பேசுமின் தொண்டர்காள் எம் பிரானையே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page