(1)
நன்றுடையானைத் தீயதிலானை, நரைவெள்ளேறு
ஒன்றுடையானை, உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச், சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்உள்ளம் குளிரும்மே
(2)
கைம்மகவேந்திக் கடுவனொடு ஊடிக் கழைபாய்வான்
செம்முக மந்தி கருவரையேறும் சிராப்பள்ளி
வெம்முக வேழத்து ஈருரி போர்த்த விகிர்தா, நீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே
(3)
மந்தம் முழவம் மழலை ததும்ப வரைநீழல்
செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடையூரும்
எந்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே
(4)
துறைமல்கு சாரல், சுனைமல்கு நீலத்து இடைவைகிச்
சிறைமல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக்
கறைமல்கு கண்டன், கனலெரியாடும் கடவுள்எம்
பிறைமல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே
(5)
கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனும் சிராப்பள்ளித்
தலைவரைநாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரைநீலம் உண்டதும் வெள்ளை நிறமாமே
(6)
வெய்ய தண்சாரல் விரிநிற வேங்கைத் தண்போது
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர் பாகம் மகிழ்வர், நஞ்சுண்பர், தலையோட்டில்
ஐயமும் கொள்வர், ஆரிவர் செய்கை அறிவாரே
(7)
வேயுயர் சாரல் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார்
பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற்று ஆகாதே
(8)
மலைமல்கு தோளன் வலிகெட ஊன்றி, மலரோன்தன்
தலை கலனாகப் பலிதிரிந்து உண்பர், பழியோரார்
சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
சிலவல போலும் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே
(9)
அரப்பள்ளியானும், மலர் உறைவானும் அறியாமைக்
கரப்புள்ளி நாடிக் கண்டிலரேனும், கல்சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீர், உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே
(10)
நாணாது உடை நீத்தோர்களும், கஞ்சி நாள் காலை
ஊணாப் பகலுண்டோதுவோர்கள் உரைக்கும் சொல்
பேணாது உறுசீர் பெறுதும் என்பீர், எம்பெருமானார்
சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே
(11)
தேன்நயம் பாடும் சிராப்பள்ளியானைத், திரைசூழ்ந்த
கானல் சங்கேறும் கழுமலஊரில் கவுணியன்
ஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவைவல்லார்
வான சம்பந்தத்தவரொடு மன்னி வாழ்வாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...