செத்திலாப் பத்து

<– திருவாசகம்

(1)
பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமுதூறும்
புதுமலர்க் கழல் இணையடி பிரிந்துங்
கையனேன் இன்னுஞ் செத்திலேன் – அந்தோ
விழித்திருந்துள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே, அரசே, அருட்பெருங் கடலே
அத்தனே, அயன் மாற்கறியொண்ணாச்
செய்ய மேனியனே, செய்வகை அறியேன்
திருப்பெருந்துறை மேவிய சிவனே

(2)
புற்றுமாய் மரமாய்ப் புனல் காலே
உண்டியாய் – அண்டவாணரும் பிறரும்
வற்றி யாரும்நின் மலரடி காணா
மன்ன – என்னையோர் வார்த்தையுட்படுத்துப்
பற்றினாய், பதையேன் – மனம்மிக உருகேன்
பரிகிலேன் – பரியாவுடல் தன்னைச்
செற்றிலேன் – இன்னுந் திரிதருகின்றேன்
திருப்பெருந்துறை மேவிய சிவனே

(3)
புலையனேனையும் பொருளென நினைந்துன்
அருள்புரிந்தனை, புரிதலுங் களித்துத்
தலையினால் நடந்தேன், விடைப்பாகா
சங்கரா, எண்ணில் வானவர்க்கெல்லாம்
நிலையனே, அலைநீர் விடமுண்ட
நித்தனே, அடையார் புரமெரித்த
சிலையனே, எனைச் செத்திடப் பணியாய்
திருப்பெருந்துறை மேவிய சிவனே

(4)
அன்பராகி மற்றருந்தவம் முயல்வார்
அயனும் மாலு(ம்) மற்றழலுறு மெழுகாம்
என்பராய் நினைவார்எனைப் பலர்
நிற்க, இங்கெனை எற்றினுக்காண்டாய்?
வன்பராய் முருடொக்கும் என் சிந்தை
மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
தென்பராய்த்துறையாய் – சிவலோகா
திருப்பெருந்துறை மேவிய சிவனே

(5)
ஆட்டுத் தேவர்தம் விதிஒழித்தன்பால்
ஐயனே என்றுன் அருள்வழி இருப்பேன்
நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே
நாதனே, உனைப் பிரிவுறா அருளைக்
காட்டித், தேவநின் கழலிணை காட்டிக்
காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய்
சேட்டைத் தேவர்தந் தேவர் பிரானே
திருப்பெருந்துறை மேவிய சிவனே

(6)
அறுக்கிலேன் உடல் துணிபடத், !தீப்புக்
கார்கிலேன், திருவருள் வகையறியேன்
பொறுக்கிலேன், உடல் போக்கிடங் காணேன்
போற்றி போற்றிஎன் போர்விடைப் பாகா
இறக்கிலேன் உனைப் பிரிந்தினிதிருக்க
என்செய்கேன் – இதுசெய்க என்றருளாய்
சிறைக்கணே புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெருந்துறை மேவிய சிவனே

(7)
மாயனே மறிகடல் விடம் உண்ட
வான வாமணி கண்டத்தெம் அமுதே
நாயினேன்உனை நினையவும் மாட்டேன்
நமச்சிவாய என்றுன்அடி பணியாப்
பேயனாகிலும் பெருநெறி காட்டாய்
பிறைகுலாஞ் சடைப் பிஞ்ஞகனேயோ
சேயனாகி நின்றலறுவதழகோ
திருப்பெருந்துறை மேவிய சிவனே

(8)
போதுசேர் அயன் – பொருகடற் கிடந்தோன்
புரந்தராதிகள் நிற்க, மற்றென்னைக்
கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக்
குறிக்கொள்கென்று நின் தொண்டரிற் கூட்டாய்
யாது செய்வதென்றிருந்தனன் – மருந்தே
அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ
சீதவார் புனல்நிலவிய வயல்சூழ்
திருப்பெருந்துறை மேவிய சிவனே

(9)
ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
நிற்க – மற்றெனை நயந்தினிதாண்டாய்
காலன் ஆர்உயிர் கொண்ட பூங்கழலாய்
கங்கையாய், அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட்டலறும் அம்மலர்க்கே
மரக்கணேனையும் வந்திடப் பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
திருப்பெருந்துறை மேவிய சிவனே

(10)
வளைக் கையானொடு மலரவன் அறியா
வான வாமலை மாதொரு பாகா
களிப்பெலாம் மிகக் கலங்கிடுகின்றேன்
கயிலை மாமலை மேவிய கடலே
அளித்து வந்தெனக்காவ என்றருளி
அச்சந் தீர்த்த நின் அருட்பெருங் கடலில்
திளைத்துந் தேக்கியும் பருகியும் உருகேன்
திருப்பெருந்துறை மேவிய சிவனே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page