சீகாழி – சம்பந்தர் தேவாரம் (9):

<– சீகாழி

ஓருருவாயினை மான்ஆங்காரத்து
ஈரியல்பாய், ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினை
இருவரோடு ஒருவனாகி நின்றனை
ஓரால்நீழல் ஒண்கழல் இரண்டும்
முப்பொழுதேத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை, நாட்ட மூன்றாகக் கோட்டினை
இருநதி அரவமோடு ஒருமதி சூடினை
ஒருதாள் ஈரயில் மூவிலைச் சூலம்
நாற்கால் மான்மறி ஐந்தலை அரவம்
ஏந்தினை, காய்ந்த நால்வாய் மும்மதத்து
இருகோட்டு ஒருகரி ஈடழித்துரித்தனை
ஒருதனு இருகால் வளைய வாங்கி
முப்புரத்தோடு நானிலம் அஞ்சக்
கொன்று தலத்துற அவுணரை அறுத்தனை
ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்
முக்குணம் இருவளி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை, ஒருங்கிய மனத்தோடு
இருபிறப்போர்ந்து முப்பொழுது குறைமுடித்து
நான்மறை ஓதி ஐவகை வேள்வி
அமைத்து ஆறங்க முதலெழுத்தோதி
வரன்முறை பயின்று எழுவான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை
இகலியமைந்துணர் புகலி அமர்ந்தனை
பொங்கு நாற்கடல் சூழ் வெங்குரு விளங்கினை
பாணி மூவுலகும் புதைய மேல்மிதந்த
தோணிபுரத்துறைந்தனை, தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை
வரபுரம் ஒன்றுணர் சிரபுரத்துறைந்தனை
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத்து அருளினை, புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்
பண்பொடு நின்றனை, சண்பை அமர்ந்தனை
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை
எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்
மறைமுதல் நான்கும்
மூன்று காலமும் தோன்ற நின்றனை
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்
அனைய தன்மையை ஆதலின் நின்னை
நினைய வல்லவர் இல்லை நீள்நிலத்தே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page