சீகாழி – சம்பந்தர் தேவாரம் (65)

<– சீகாழி

(1)
பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின்ற உம்பர், அப்
பாலே சேர்வாய் ஏனோர், கான்பயில்கண முனிவர்களும்
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின் மங்கை தன்னொடும்
சேர்வார்; நாணாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாம்
சந்தித்தே இந்தப்பார் சனங்கள் நின்று தம்கணால்
தாமே காணா வாழ்வாரத் தகவுசெய்தவனது இடம்
கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்திலங்கு சந்தனக்
காடார்பூவார் சீர்மேவும் கழுமல வளநகரே

(2)
பிச்சைக்கே இச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப்
பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்
உச்சத்தான் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணேறு
ஊராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெய்இசை
வச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்
வாராநேரே மாலாகும் வசிவல அவனதிடம்
கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினம்
காரார் காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே

(3)
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்
சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோடு
அங்கைச் சேர்வின்றிக்கே அடைந்துடைந்த வெண்தலைப்
பாலேமேலே மாலேயப் படர்வுறும் அவன்இறகும்
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்
போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையன்இடம்
கங்கைக்கேயும் பொற்பார் கலந்துவந்த பொன்னியின்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே

(4)
அண்டத்தால் எண்திக்கும் அமைந்தடங்கு மண்டலத்து
ஆறேவேறே வானாள்வார் அவரவர் இடமதெலாம்
மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த உம்பரும்
மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த விஞ்சிசூழ்
மூவாமூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம்
கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக்
காலேஓவாதார் மேவும் கழுமல வளநகரே

(5)
திக்கிற்றே அற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச்
சீறார்வீறார் போரார் தாரகன்உடல் அவனெதிரே
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப்
போலேபூநீர் தீகால்மீப் புணர்தரும் உயிர்கள்திறம்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை !செங்கதத்
தோடேயாமே மாலோகத் துயர் களைபவனது இடம்
கைக்கப்பேர் யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்
காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே

(6)
செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறும்
சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்
ஒற்றைச்சேர் முற்றல் கொம்புடைத் தடக்கை முக்கண்மிக்கு
ஓவாதேபாய் மாதானத்துறு புகர்முக இறையைப்
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
பேராநோய் தாம் ஏயாமைப் பிரிவுசெய்தவனது இடம்
கற்றிட்டே எட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்
காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே

(7)
பத்திப்பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள்வாய்ப்
பாலேபோகாமே, காவாப் பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்கு முக்குணங்கள் வாய்
மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடம்
கத்திட்டோர் சட்டங்கம் கலந்திலங்கு நற்பொருள்
காலேஓவாதார் மேவும் கழுமல வளநகரே

(8)
செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழில்
சேரேவாரா வாரீசத் திரையெறி நகர்இறைவன்
இம்பர்க்கு ஏதம் செய்திட்டிருந்து, அரன் பயின்றவெற்பு
ஏரார் பூநேரோர் பாதத்தெழில் விரல் அவண்நிறுவிட்டு
அம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்தனம் செய்தாற்கு
ஆரார் கூர்வாள் வாணாள் அன்றருள் புரிபவனது இடம்
கம்பத்தார் தும்பித்திண் கவுள்சொரிந்த மும்மதக்
காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே

(9)
பன்றிக்கோலம் கொண்டிப் படித்தடம் பயின்று !இடப்
பானாம் மால், தானா மேயப் பறவையின் உருவுகொள
ஒன்றிட்டே அம்புச்சேர் உயர்ந்த பங்கயத்தவன்
ஓதான்ஓதான் அஃதுணராது உருவினது அடிமுடியும்
சென்றிட்டே வந்திப்பத், திருக்களங்கொள் பைங்கணின்று
ஏசால்வேறோர் ஆகாரம் தெரிவுசெய்தவனது இடம்
கன்றுக்கே முன்றிற்கே கலந்திலம் நிறைக்கவும்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே

(10)
தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
தாமேபேணாதே நாளும் சமணொடு உழல்பவரும்
இட்டத்தால் அத்தம்தான் இதன்றதென்று நின்றவர்க்கு
ஏயாமே வாயேதுச் சொல் இலைமலி மருதம்பூப்
புட்டத்தே அட்டிட்டுப் புதைக்கும் மெய்க்கொள் புத்தரும்
போல்வார்தாம் ஓராமே போய்ப் புணர்வு செய்தவனது இடம்
கட்டிக்கால் வெட்டித் தீங்கரும்பு தந்த பைம்புனல்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே

(11)
கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
கானேதேனே போராரும் கழுமல நகர்இறையைத்
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்த நற்கலைத்துறை
தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விரகன் மொழிகள்
எஞ்சத் தேய்வின்றிக்கே அமைத்து இசைத்தமைத்த கொண்டு
ஏழேஏழே நாலேமூன்று இயலிசை இசைஇயல்பா
வஞ்சத்தேய்வின்றிக்கே மனம்கொளப் பயிற்றுவோர்
மார்பே சேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page