சீகாழி – சம்பந்தர் தேவாரம் (58):

<– சீகாழி

(1)
பந்துசேர் விரலாள், பவளத்துவர் வாயினாள், பனிமாமதி போல்முகத்து
அந்தமில் புகழாள் மலைமாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்விடம், வானவர் எத்திசையும் நிறைந்து வலம் செய்து மாமலர்
புந்தி செய்திறைஞ்சிப் பொழி பூந்தராய் போற்றுதுமே
(2)
காவியங்கருங்கண்ணினாள், கனித் தொண்டைவாய்க் கதிர்முத்த நல்வெண்ணகைத்
தூவியம் பெடை அன்னநடைச் சுரிமென் குழலாள்
தேவியும் திருமேனியோர் பாகமாய் ஒன்றிரண்டொரு மூன்றொடு சேர்பதி
பூவில் அந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே
(3)
பையராவரும் அல்குல் மெல்லியல், பஞ்சின்நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத்
தையலாள் ஒருபாலுடை எம்இறை சாரும்இடம்
செய்யெலாம் கழுநீர் கமலம் மலர்த்தேறல் ஊறலில் சேறுலராத நற்
பொய்யிலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே
(4)
முள்ளி நாண்முகை மொட்டியல் கோங்கின் அரும்பு, தேன்கொள் குரும்பை, மூவாமருந்து
உள்ளியன்ற பைம்பொற் கலசத்தியல் ஒத்தமுலை
வெள்ளி மால்வரை அன்னதோர் மேனியின் மேவினார் பதி, வீமரு தண்பொழில்
புள்ளினம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே
(5)
பண்ணியன்றெழு மென்மொழியாள் பகர் கோதை, ஏர்திகழ் பைந்தளிர் மேனியோர்
பெண்ணியன்ற மொய்ம்பில் பெருமாற்கிடம், பெய்வளையார்
கண்ணியன்றெழு காவிச் செழுங்கருநீல மல்கிய காமரு வாவிநல்
புண்ணியர் உறையும்பதி பூந்தராய் போற்றுதுமே
(6)
வாணிலா மதிபோல் நுதலாள், மடமாழை ஒண்கணாள், வண்தரளந்நகை
பாணிலாவிய இன்னிசையார் மொழிப் பாவையொடும்
சேணிலாத்திகழ் செஞ்சடை எம்அண்ணல் சேர்வது, சிகரப் பெருங்கோயில் சூழ்
போணிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே
(7)
காருலாவிய வார்குழலாள், கயல் கண்ணினாள், புயற்காலொளி மின்னிடை
வாருலாவிய மென்முலையாள் மலை மாதுடனாய்
நீருலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாம முந்நான்கு நிகழ்பதி
போருலா எயில்சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே
(8)
காசை சேர்குழலாள், கயல்ஏர் தடங்கண்ணி, காம்பனதோள் கதிர்மென் முலைத்
தேசுசேர் மலை மாதமரும் திருமார்பகலத்து
ஈசன் மேவும், இருங்கயிலை எடுத்தானை அன்றடர்த்தான் இணைச் சேவடி
பூசை செய்பவர் சேர்பொழில் பூந்தராய் போற்றுதுமே
(9)
கொங்குசேர் குழலாள், நிழல் வெண்ணகைக் கொவ்வை வாய்க் கொடியேர் இடையாள் உமை
பங்குசேர் திருமார்புடையார், படர் தீயுருவாய்
மங்குல் வண்ணனும் மாமலரோனும் மயங்க நீண்டவர், வான்மிசை வந்தெழு
பொங்கு நீரில் மிதந்தநல் பூந்தராய் போற்றுதுமே
(10)
கலவ மாமயிலார் இயலாள், கரும்பன்ன மென்மொழியாள், கதிர் வாள்நுதல்
குலவு பூங்குழலாள் உமைகூறனை, வேறுரையால்
அலவை சொல்லுவார் தேரமண் ஆதர்கள் ஆக்கினான் தனை, நண்ணலும் நல்கும்நற்
புலவர் தாம்புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே
(11)
தேம்பல் நுண்ணிடையாள் செழுஞ்சேலன கண்ணியோடு அண்ணல் சேர்விடம், தேன்அமர்
பூம்பொழில் திகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதும் என்று
ஓம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன் ஒண்தமிழ் மாலைகொண்டு
ஆம்படி இவை ஏத்த வல்லார்க்கடையா வினையே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page