(1)
எய்யா வென்றித் தானவர்ஊர் மூன்றெரி செய்த
மையார் கண்டன், மாதுமை வைகும் திருமேனிச்
செய்யான், வெண்ணீறணிவான் திகழ்பொற் பதிபோலும்
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவம்மே
(2)
மாதொரு பாலும், மாலொரு பாலும் மகிழ்கின்ற
நாதன் என்றேத்து நம்பரன் வைகும் நகர்போலும்
மாதவிமேய வண்டிசைபாட மயிலாடப்
போதலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவம்மே
(3)
வற்றா நதியும் மதியும் பொதியும் சடைமேலே
புற்றார்அரவின் படமாடவும்இப் புவனிக்கோர்
பற்றாய்இடுமின் பலிஎன்றடைவார் பதிபோலும்
பொற்றாமரையின் பொய்கை நிலாவும் புறவம்மே
(4)
துன்னார் புரமும், பிரமன் சிரமும் துணிசெய்து
மின்னார் சடைமேல் அரவும் மதியும் விளையாடப்
பன்னாள் இடுமின்பலி என்றடைவார் பதிபோலும்
பொன்னார் புரிநூல் அந்தணர் வாழும் புறவம்மே
(5)
தேவா அரனே சரண் என்றிமையோர் திசைதோறும்
காவாய் என்று வந்தடையக் கார்விடம் உண்டு
பாவார் மறையும் பயில்வோர் உறையும் பதிபோலும்
பூவார் கோலச் சோலை சுலாவும் புறவம்மே
(6)
கற்றறிவெய்திக் காமன் முன்னாகும் முகவெல்லாம்
அற்று, ‘அரனே நின்னடி சரண்’ என்னும் அடியோர்க்குப்
பற்றதுவாய பாசுபதன் சேர்பதி என்பர்
பொற்திகழ் மாடத்தொளிகள் நிலாவும் புறவம்மே
(7)
எண்திசையோர் அஞ்சிடு வகை கார்சேர் வரைஎன்னக்
கொண்டெழு கோலமுகில் போல் பெரிய கரி தன்னைப்
பண்டுரி செய்தோன் பாவனை செய்யும் பதியென்பர்
புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவம்மே
(8)
பரக்கும் தொல்சீர்த் தேவர்கள் சேனைப் பௌவத்தைத்
துரக்கும் செந்தீப் போலமர் செய்யும் தொழில் மேவும்
அரக்கன் திண்தோள் அழிவித்தான் அக்காலத்தில்
புரக்கும் வேந்தன் சேர்தரு மூதூர் புறவம்மே
(9)
மீத்திகழ் அண்டம் தந்தயனோடு, மிகுமாலும்
மூர்த்தியை நாடிக் காணவொணாது முயல்விட்டாங்கு
ஏத்த, வெளிப்பாடு எய்தியவன் தன் இடமென்பர்
பூத்திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவம்மே
(10)
வையகநீர் தீ வாயுவும், விண்ணும் முதலானான்
மெய்யல தேரர் உண்டிலை என்றே நின்றேதம்
கையினில் உண்போர் காணஓணாதான் நகரென்பர்
பொய்யகம் இல்லாப் பூசுரர் வாழும் புறவம்மே
(11)
பொன்னியல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து
மன்னிய ஈசன்சேவடி நாளும் பணிகின்ற
தன்னியல்பில்லாச் சண்பையர்கோன் சீர்ச் சம்பந்தன்
இன்னிசை ஈரைந்தேத்த வல்லோர்கட்கிடர் போமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...