சீகாழி – சம்பந்தர் தேவாரம் (56):

<– சீகாழி

(1)
கண்ணுதலானும் வெண்ணீற்றினானும், கழலார்க்கவே
பண்ணிசை பாட நின்றாடினானும், பரஞ்சோதியும்
புண்ணிய நான்மறையோர்கள் ஏத்தும் புகலிந் நகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே
(2)
சாம்பலோடும் தழலாடினானும், சடையின் மிசைப்
பாம்பினோடும் மதி சூடினானும், பசுவேறியும்
பூம்படுகல் இளவாளை பாயும் புகலிந் நகர்க்
காம்பன தோளியொடும் இருந்த கடவுளன்றே
(3)
கருப்பு நல்வார் சிலைக்காமன் வேவக் கடைக்கண்டானும்
மருப்பு நல்ஆனையின் ஈருரி போர்த்த மணாளனும்
பொருப்பன மாமணி மாடமோங்கும் புகலிந் நகர்
விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலனன்றே
(4)
அங்கையில் அங்கழலேந்தினானும், அழகாகவே
கங்கையைச் செஞ்சடை சூடினானும், கடலின்னிடைப்
பொங்கிய நஞ்சமுதுண்டவனும், புகலிந் நகர்
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே
(5)
சாமநல் வேதனும், தக்கன்தன் வேள்வி தகர்த்தானும்
நாமம் நூறாயிரம் சொல்லி வானோர் தொழு நாதனும்
பூமல்கு தண்பொழில் மன்னும், அந்தண் புகலிந் நகர்க்
கோமள மாதொடும் வீற்றிருந்த குழகனன்றே
(6)
இரவிடை ஒள்ளெரி ஆடினானும், இமையோர் தொழச்
செருவிடை முப்புரம் தீயெரித்த சிவலோகனும்
பொருவிடை ஒன்றுகந்தேறினானும், புகலிந் நகர்
அரவிடை மாதொடும் வீற்றிருந்த அழகனன்றே
(7)
சேர்ப்பது திண்சிலை மேவினானும், திகழ்பாலன் மேல்
வேர்ப்பது செய்த வெங்கூற்று உதைத்தானும், வேள்விப் புகை
போர்ப்பது செய்து அணிமாடம் ஓங்கும் புகலிந் நகர்ப்
பார்ப்பதியோடுடன் வீற்றிருந்த பரமனன்றே
(8)
கன்னெடு மால்வரைக் கீழ் அரக்கன் இடர் கண்டானும்
வின்னெடும் போர்விறல் வேடனாகி விசயற்கொரு
பொன்னெடுங் கோல் கொடுத்தானும், அந்தண் புகலிந் நகர்
அன்னமன்ன நடை மங்கையொடும் அமர்ந்தானன்றே
(9)
பொன்னிற நான்முகன், பச்சையான் என்றிவர் புக்குழித்
தன்னை இன்னானெனக் காண்பரிய தழல்சோதியும்
புன்னை பொன் தாதுதிர் மல்கும் அந்தண் புகலிந் நகர்
மின்னிடை மாதொடும் வீற்றிருந்த விமலனன்றே
(10)
பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப் பேணாததோர்
தொண்டரும் காதல்செய் சோதியாய் சுடர்ச் சோதியான்
புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புகலிந் நகர்
வண்டமர் கோதையோடும் இருந்த மணவாளனே
(11)
பூங்கமழ் கோதையோடும் இருந்தான் புகலிந் நகர்ப்
பாங்கனை, ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்திவை
ஆங்கமர்வெய்திய ஆதியாக இசை வல்லவர்
ஓங்கு அமராவதியோர் தொழச் செல்வதும் உண்மையே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page