சீகாழி – சம்பந்தர் தேவாரம் (55):

<– சீகாழி

(1)
விடையதேறி வெறி அக்கரவார்த்த விமலனார்
படையதாகப் பரசு தரித்தார்க்கிடமாவது
கொடையில்ஓவார், குலமும் உயர்ந்த மறையோர்கள் தாம்
புடைகொள் வேள்விப் புகை உம்பர்உலாவும் புகலியே
(2)
வேலை தன்னில் மிகுநஞ்சினை உண்டிருள் கண்டனார்
ஞாலமெங்கும் பலி கொண்டுழல்வார் நகராவது
சால நல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச்
சோலை மேவும் கிளிதான் சொல்பயிலும் புகலியே
(3)
வண்டு வாழும் குழல் மங்கையோர் கூறுகந்தார், மதித்
துண்டமேவும் சுடர்த் தொல் சடையார்க்கிடமாவது
கெண்டை பாய மடுவில் உயர் கேதகை மாதவி
புண்டரீகம் மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே
(4)
திரியும் மூன்றுபுரமும் எரித்துத் திகழ் வானவர்க்கு
அரிய பெம்மான், அரவக் குழையார்க்கிடமாவது
பெரிய மாடத்துயரும் கொடியின் மிடைவால் வெயில்
புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே
(5)
ஏவிலாரும் சிலைப் பார்த்தனுக்கின்னருள் செய்தவர்
நாவினாள் மூக்கரிவித்த நம்பர்க்கிடமாவது
மாவிலாரும் கனிவார் கிடங்கில் விழவாளை போய்ப்
பூவிலாரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே
(6)
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும்
ஒக்கவே எம்உரவோன் உறையும் இடமாவது
கொக்கு வாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள்
புக்க வாசப் புன்னை பொன்திரள் காட்டும் புகலியே
(7)
(8)
தொலைவிலாத அரக்கன் உரத்தைத் தொலைவித்தவன்
தலையும் தோளும் நெரித்த சதுரர்க்கிடமாவது
கலையின் மேவும் மனத்தோர், இரப்போர்க்குக் கரப்பிலார்
பொலியும் அந்தண் பொழில் சூழ்ந்தழகாரும் புகலியே
(9)
கீண்டு புக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழல் அன்னமாய்க்
காண்டும்என்றார், கழல் பணிய நின்றார்க்கிடமாவது
நீண்ட நாரை இரையாரல் வார நிறைசெறுவினில்
பூண்டு மிக்க வயல்காட்டும் அந்தண் புகலியே
(10)
தடுக்குடுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர்
இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கிடமாவது
மடுப்படுக்கும் சுருதிப் பொருள் வல்லவர் வானுளோர்
அடுத்தடுத்துப் புகுந்தீண்டும் அந்தண் புகலியே
(11)
எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியைக்
கைதவமில்லாக் கவுணியன் ஞானசம்பந்தன் சீர்
செய்த பத்தும்இவை செப்பவல்லார் சிவலோகத்தில்
எய்தி நல்ல இமையோர்களேத்த இருப்பார்களே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page