சீகாழி – சம்பந்தர் தேவாரம் (54):

<– சீகாழி

(1)
உருவார்ந்த மெல்லியலோர் பாகம்உடையீர், அடைவோர்க்குக்
கருவார்ந்த வானுலகம் காட்டிக் கொடுத்தல் கருத்தானீர்
பொருவார்ந்த தெண்கடல்ஓண் சங்கம்திளைக்கும் பூம்புகலித்
திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே
(2)
நீரார்ந்த செஞ்சடையீர், நிரையார் கழல்சேர் பாதத்தீர்
ஊரார்ந்த சில்பலியீர், உழைமான் உரிதோல் ஆடையீர்
போரார்ந்த தெண்திரை சென்றணையும் கானல் பூம்புகலிச்
சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே
(3)
அழிமல்கு பூம்புனலும் அரவும் சடைமேல் அடைவெய்த
மொழிமல்கு மாமறையீர், கறையார் கண்டத்தெண்தோளீர்
பொழில்மல்கு வண்டினங்கள் அறையும் கானல் பூம்புகலி
எழில்மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே
(4)
கையிலார்ந்த வெண்மழு ஒன்றுடையீர், கடிய கரியின்தோல்
மயிலார்ந்த சாயல் மடமங்கை வெருவ மெய்போர்த்தீர்
பயிலார்ந்த வேதியர்கள் பதியாய் விளங்கும் பைம்புகலி
எயிலார்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே
(5)
நாவார்ந்த பாடலீர், ஆடலரவம் அரைக்கார்த்தீர்
பாவார்ந்த பல்பொருளின் பயன்கள் ஆனீர், அயன் பேணும்
பூவார்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில்புகலித்
தேவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே
(6)
மண்ணார்ந்த மண்முழவம் ததும்ப மலையான் மகளென்னும்
பெண்ணார்ந்த மெய்மகிழப் பேணியெரி கொண்டாடினீர்
விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலிக்
கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே
(7)
களிபுல்கு வல்லவுணர் ஊர்மூன்றெரியக் கணைதொட்டீர்
அளிபுல்கு பூமுடியீர், அமரரேத்த அருள் செய்தீர்
தெளிபுல்கு தேனினமும் மலருள் விரைசேர் திண்புகலி
ஒளிபுல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே
(8)
பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக் கீழிட்டு
உரந்தோன்றும் பாடல் கேட்டுகவை அளித்தீர், உகவாதார்
புரந்தோன்றும் மும்மதிலும் எரியச் செற்றீர், பூம்புகலி
வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
(9)
சலந்தாங்கு தாமரைமேல் அயனும், தரணி அளந்தானும்
கலந்தோங்கி வந்திழிந்தும் காணா வண்ணம் கனலானீர்
புலந்தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம்புகலி
நலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே
(10)
நெடிதாய வன்சமணும், நிறைவொன்றில்லாச் சாக்கியரும்
கடிதாய கட்டுரையால் கழற மேலோர் பொருளானீர்
பொடியாரு மேனியினீர், புகலி மறையோர் புரிந்தேத்த
வடிவாரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
(11)
ஒப்பரிய பூம்புகலி ஓங்குகோயில் மேயானை
அப்பரிசில் பதியான அணிகொள் ஞானசம்பந்தன்
செப்பரிய தண்தமிழால் தெரிந்த பாடல் இவைவல்லார்
எப்பரிசில் இடர்நீங்கி இமையோர் உலகத்திருப்பாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page