(1)
ஆடலரவு அசைத்தான், அருமாமறை தான் விரித்தான், கொன்றை
சூடிய செஞ்சடையான், சுடுகாடமர்ந்த பிரான்
ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்து அடியாரேத்த
ஆடிய எம்மிறைஊர் புகலிப் பதியாமே
(2)
ஏலமலி குழலார் இசைபாடி எழுந்து அருளால் சென்று
சோலை மலிசுனையில் குடைந்தாடித் துதிசெய்ய
ஆலைமலி புகைபோய் அண்டர் வானத்தை மூடிநின்று, நல்ல
மாலையது செய்யும் புகலிப் பதியாமே
(3)
ஆறணி செஞ்சடையான், அழகார்புர மூன்றும் அன்று வேவ
நீறணியாக வைத்த நிமிர்புன்சடை எம்இறைவன்
பாறணி வெண்தலையில் பகலே பலியென்று வந்து நின்ற
வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே
(4)
வெள்ளமது சடைமேல் கரந்தான், விரவார் புரங்கள் மூன்றும்
கொள்ள எரிமடுத்தான், குறைவின்றி உறைகோயில்
அள்ளல் விளைகழனி அழகார்விரைத் தாமரைமேல் அன்னம்
புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே
(5)
சூடுமதிச் சடைமேல் சுரும்பார் மலர்க் கொன்றை துன்ற, நட்டம்
ஆடும் அமரர்பிரான், அழகார் உமையோடும்உடன்
வேடுபட நடந்த விகிர்தன், குணம் பரவித் தொண்டர்
பாட இனிதுறையும் புகலிப் பதியாமே
(6)
மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய் வரிவண்டினங்கள் வந்து
நந்திசை பாட, நடம் பயில்கின்ற நம்பன்இடம்
அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும்
புந்திசெய் நான்மறையோர் புகலிப் பதிதானே
(7)
மங்கையோர் கூறுகந்த மழுவாளன், வார்சடைமேல் திங்கள்
கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன் கருதும்இடம்
செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம்
அங்கையினால் தொழுவார் அவலம் அறியாரே
(8)
வில்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும்
நல்லிடம் என்றறியான் நலியும் விறலரக்கன்
பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப், பாடலுமே கைவாள்
ஒல்லையருள் புரிந்தான் உறையும் புகலியதே
(9)
தாதலர் தாமரைமேல் அயனும், திருமாலும் தேடி
ஓதியும் காண்பரிய உமைகோன் உறையுமிடம்
மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த
போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே
(10)
வெந்துவர் மேனியினார், விரிகோவண நீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருள் என்னேல்
வந்தெதிரும் புரமூன்ரெரித்தான் உறைகோயில், வாய்ந்த
புந்தியினார் பயிலும் புகலிப் பதிதானே
(11)
வேதமோர் கீதமுணர் வாணர் தொழுதேத்த, மிகுவாசப்
போதனைப்போல் மறையோர் பயிலும் புகலிதன்னுள்
நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
ஓதவல்லார் உலகில் உறுநோய் களைவாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...