(1)
சுரர்உலகு நரர்கள்பயில் தரணிதல முரணழிய அரணமதில், முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமன்இடமாம்
வரமருள வரன்முறையின் நிரைநிறைகொள் வருசுருதி சிரஉரையினால்
பிரமன்உயர் அரன்எழில்கொள் சரணஇணை பரவவளர் பிரமபுரமே
(2)
தாணுமிகு ஆணிசை கொடாணுவியர் பேணுமது காணுமளவில்
கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி மாணிமது நாணும்வகையே
ஏணுகரி பூணழிய ஆணியல்கொள் மாணிபதி சேணமரர்கோன்
வேணுவினை ஏணிநகர் காணில்திவி காணநடு வேணுபுரமே
(3)
பகலொளிசெய் நகமணியை முகைமலரை நிகழ்சரண அகவுமுனிவர்க்கு
அகலமலி சகலகலை மிகஉரைசெய் முகமுடைய பகவன்இடமாம்
பகை களையும் வகையிலறு முகஇறையை மிகஅருள நிகரில்இமையோர்
புகஉலகு புகழஎழில் திகழநிகழ் அலர்பெருகு புகலிநகரே
(4)
அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அரவங்கள்எழில் தங்கும்இதழித்
துங்கமலர் தங்குசடை அங்கிநிகர் எங்கள்இறை தங்கும்இடமாம்
வெங்கதிர் விளங்குலகம் எங்குமெதிர் பொங்கெரி புலன்கள் களைவோர்
வெங்குரு விளங்கி உமைபங்கர் சரணங்கள்பணி வெங்குருஅதே
(5)
ஆணியல்பு காணவன வாணஇயல் பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை பேணியற நாணிவிசயன்
பாணியமர் பூணஅருள் மாணு பிரமாணிஇடம், ஏணிமுறையில்
பாணி உலகாள மிக ஆணின்மலி தோணிநிகர் தோணிபுரமே
(6)
நிராமய பராபர புராதன பராவுசிவ, ராகஅருள்என்று
இராவும்எதிராயது பராநினை புராணனன் அமர்ஆதி பதியாம்
அராமிசை இராதஎழில் தராய, அர பராயண வராகஉரு !வா
தராயனை, விராயெரி பராய்மிகு தராய்மொழி விராய பதியே
(7)
அரணையுறு முரணர்பலர் மரணம்வர இரணமதில் அரமலிபடைக்
கரம்விசிறு விரகன்அமர் கரணன்உயர் பரன்நெறி கொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறும் அரவைஅரி சிரம்அரிய,அச்
சிரம்அரன சரணமவை பரவஇரு கிரகம்அமர் சிரபுரம்அதே
(8)
அறமழிவு பெறஉலகு தெறுபுயவன் விறலழிய நிறுவிவிரல்,மா
மறையின்ஒலி முறைமுரல்செய் பிறைஎயிறன் உறஅருளும் இறைவன் இடமாம்
குறைவின்மிக நிறைதைஉழி மறைஅமரர் நிறைஅருள முறையொடுவரும்
புறவன்எதிர் நிறைநிலவு பொறையன்உடல் பெறஅருளும் புறவம்அதுவே
(9)
விண்பயில மண்பகிரி வண்பிரமன் எண்பெரிய பண்படைகொள் மால்
கண்பரியும் ஒண்பொழிய நுண்பொருள்கள் தண்புகழ்கொள் கண்டன்இடமாம்
மண்பரியும் ஒண்பொழிய நுண்புசகர் புண்பயில விண்படர,அச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய் பண்பு களை சண்பைநகரே
(10)
பாழிஉறை வேழநிகர் பாழ்அமணர் சூழுமுடல் ஆளர்உணரா
ஏழினிசை யாழின்மொழி ஏழையவள் வாழும்இறை தாழும்இடமாம்
கீழிசைகொள் மேலுலகில் வாழரசு சூழரசு வாழஅரனுக்கு
ஆழியசில் காழிசெய ஏழுலகில் ஊழிவளர் காழிநகரே
(11)
நச்சரவு கச்சென அசைச்சு மதி உச்சியின் மிலைச்சொரு கையான்
மெய்ச்சிரம் அணைச்சுலகில் நிச்சமிடு பிச்சைஅமர் பிச்சன்இடமாம்
மச்சமதம் நச்சி மதமச்சிறுமியைச் செய்தவ அச்ச விரதக்
கொச்சைமுர அச்சர்பணி அச்சுரர்கள் நச்சிமிடை கொச்சை நகரே
(12)
ஒழுகலரிதழி கலியில் உழியுலகு பழிபெருகு வழியைநினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதில்இறை எழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள் மொழி தகையவே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...