(1)
இறையவன், ஈசன், எந்தை, இமையோர் தொழுதேத்த நின்ற
கறையணி கண்டன், வெண்தோடணி காதினன், காலத்தன்று
மறைமொழி வாய்மையினான், மலையாளொடும் மன்னுசென்னிப்
பிறையணி செஞ்சடையான், பிரமாபுரம் பேணுமினே
(2)
சடையினன், சாம வேதன், சரி கோவணவன், மழுவாள்
படையினன், பாய்புலித்தோல் உடையான், மறை பல்கலைநூல்
உடையவன், ஊனமில்லி, உடனாய் உமை நங்கையென்னும்
பெடையொடும் பேணுமிடம் பிரமாபுரம் பேணுமினே
(3)
மாணியை நாடு காலன் உயிர் மாய்தரச் செற்றுக், காளி
காணிய ஆடல்கொண்டான், கலந்தூர் வழி சென்று பிச்சை
ஊணியல்பாகக் கொண்டங்குடனே உமை நங்கையொடும்
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் பேணுமினே
(4)
பாரிடம் விண்ணுமெங்கும் பயில்நஞ்சு பரந்து மிண்டப்
பேரிடர்த் தேவர்கணம் ‘பெருமான் இது கா’ எனலும்
ஓரிடத்தே கரந்தங்குமை நங்கையொடும் உடனே
பேரிடமாகக் கொண்ட பிரமாபுரம் பேணுமினே
(5)
நச்சரவச் சடைமேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்தங்கு
அச்சமெழ விடைமேல் அழகார் மழுவேந்தி, நல்ல
இச்சை பகர்ந்து, ‘மிகஇடுமின் பலியென்று’ நாளும்
பிச்சைகொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே
(6)
பெற்றவன், முப்புரங்கள் பிழையா வண்ணம் வாளியினால்
செற்றவன், செஞ்சடையில் திகழ் கங்கைதனைத் தரித்திட்டு
ஒற்றை விடையினனாய் உமை நங்கையொடும் உடனே
பெற்றிமையால் இருந்தான், பிரமாபுரம் பேணுமினே
(7)
வேதமலிந்த ஒலி, விழவின் ஒலி, வீணையொலி
கீத மலிந்துடனே கிளரத்திகழ் பௌவ மறை
ஓத மலிந்துயர்வான் முகடேற, ஒண் மால்வரையான்
பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணுமினே
(8)
இமையவர் அஞ்சியோட, எதிர்வார்அவர் தம்மையின்றி
அமைதரு வல்லரக்கன் அடர்த்தும் மலை அன்றெடுப்பக்
குமையது செய்து பாடக், கொற்ற வாளொடு நாள் கொடுத்திட்டு
உமையொடிருந்த பிரான் பிரமாபுரம் உன்னுமினே
(9)
ஞாலம் அளித்தவனும் அரியும் அடியோடுமுடி
காலம் பலசெலவும் கண்டிலாமையினால் கதறி
ஓலமிட, அருளி, உமை நங்கையொடும் உடனாய்
ஏலஇருந்த பிரான் பிரமாபுரம் ஏத்துமினே
(10)
துவருறும் ஆடையினார், தொக்க பீலியர், நக்கரையர்
அவரவர் தன்மைகள் கண்டு அணுகேன்மின், அருள்பெறுவீர்
கவருறு சிந்தையொன்றிக் கழி காலமெல்லாம் படைத்த
இவரவர் என்றிறைஞ்சிப் பிரமாபுரம் ஏத்துமினே
(11)
உரைதரு நான்மறையோர் புகழ்ந்தேத்த, ஒண் மாதினொடும்
வரையென வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத்து
அரசினை, ஏத்தவல்ல அணிசம்பந்தன் பத்தும் வல்லார்
விரைதரு விண்ணுலகம் எதிர்கொள்ள விரும்புவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...