(1)
கரமுனம் மலரால் புனல்மலர் தூவியே கலந்தேத்துமின்
பரமனூர், பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள் தாம்பயில்
வரமுன்ன அருள் செய்யவல்ல எம்ஐயன் நாள்தொறும் மேயசீர்ப்
பிரமனூர், பிரமாபுரத்துறை பிஞ்ஞகன் அருள் பேணியே
(2)
விண்ணிலார் மதி சூடினான், விரும்பும் மறையவன்தன் தலை
உண்ண நன்பலி பேணினான், உலகத்துள் ஊனுயிரான், மலைப்
பெண்ணினார் திருமேனியான், பிரமாபுரத்துறை கோயிலுள்
அண்ணலார், அருளாளனாய் அமர்கின்ற எம்முடை ஆதியே
(3)
எல்லையில் புகழாளனும், இமையோர் கணத்துடன் கூடியும்
பல்லையார் தலையில் பலியது கொண்டுகந்த படிறனும்
தொல்லை வையகத்தேறு தொண்டர்கள் தூமலர் சொரிந்தேத்தவே
மல்லையம் பொழில் தேன்பில்கும் பிரமாபுரத்துறை மைந்தனே
(4)
அடையலார் புரம் சீறி, அந்தணர் ஏத்த மாமட மாதொடும்
பெடையெலாம் கடற்கானல் புல்கும் பிரமாபுரத்துறை கோயிலான்
தொடையலார் நறுங்கொன்றையான், தொழிலே பரவி நின்றேத்தினால்
இடையிலார் சிவலோகம் எய்துதற்கீது காரணம் காண்மினே
(5)
வாயிடை மறையோதி, மங்கையர் வந்திடப் பலிகொண்டு போய்ப்
போயிடம் எரி கானிடைப் புரி நாடகம் இனிதாடினான்
பேயொடும் குடி வாழ்வினான், பிரமாபுரத்துறை பிஞ்ஞகன்
தாயிடைப்பொருள் தந்தையாகும் என்றோதுவார்க்கருள் தன்மையே
(6)
ஊடினால் இனிஆவதென் உயர்நெஞ்சமே, உறு வல்வினைக்கு
ஓடிநீ உழல்கின்றதென்? அழலன்று தன் கையிலேந்தினான்
பீடுநேர்ந்தது கொள்கையான், பிரமாபுரத்துறை வேதியன்
ஏடுநேர் மதியோடராஅணி எந்தை என்று நின்றேத்திடே
(7)
செய்யன், வெள்ளியன், ஒள்ளியார்சிலர் என்றும் ஏத்தி நினைந்திட
ஐயன், ஆண்தகை அந்தணன், அருமாமறைப் பொருளாயினான்
பெய்யுமா மழையானவன், பிரமாபுரம் இடம் பேணிய
வெய்யவெண் மழுவேந்தியைந் நினைந்தேத்துமின் வினை வீடவே
(8)
கன்றொருக் கையிலேந்தி, நல்விளவின் கனிபட நூறியும்
சென்றொருக்கிய மாமறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனுமாய்
அன்றரக்கனைச் செற்றவன் அடியும் முடியவை காண்கிலார்
பின்தருக்கிய தண்பொழில் பிரமாபுரத்தரன் பெற்றியே
(9)
உண்டுடுக்கை விட்டார்களும், உயர்கஞ்சி மண்டைகொள் தேரரும்
பண்டடக்கு சொற்பேசும் அப்பரிவொன்றிலார்கள் சொற் கொள்ளன்மின்
தண்டொடக்கு வன்சூலமும் தழல் மாமழுப்படை தன்கையில்
கொண்டொடுக்கிய மைந்தன்எம் பிரமாபுரத்துறை கூத்தனே
(10)
பித்தனைப் பிரமாபுரத்துறை பிஞ்ஞகன் கழல்பேணியே
மெய்த்தவத்து நின்றோர்களுக்குரை செய்து நன்பொருள் மேவிட
வைத்த சிந்தையுண் ஞானசம்பந்தன் வாய் நவின்றெழு மாலைகள்
பொய்த்தவம் பொறிநீங்க இன்னிசை போற்றி செய்யும் மெய்ம் மாந்தரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...