சீகாழி – சம்பந்தர் தேவாரம் (47):

<– சீகாழி

(1)
எம்பிரான் எனக்கமுதம் ஆவானும், தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானும், தழலேந்து கையானும்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழில் பிரமபுரத்துறையும் வானவனே
(2)
தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக்கு
ஆமென்று சரண்புகுந்தார் தமைக்காக்கும் கருணையினான்
ஓம்என்று மறைபயில்வார் பிரமபுரத்துறைகின்ற
காமன்தன் உடலெரியக் கனல் சேர்ந்த கண்ணானே
(3)
நன்னெஞ்சே உனைஇரந்தேன், நம்பெருமான் திருவடியே
உன்னஞ் செய்திரு கண்டாய், உய்வதனை வேண்டுதியேல்
அன்னஞ்சேர் பிரமபுரத்தாரமுதை எப்போதும்
பன்னஞ்சீர் வாய்அதுவே, பார் கண்ணே பரிந்திடவே
(4)
சாநாளின்றி மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்கும்
கோனாளும் திருவடிக்கே கொழுமலர் தூவு, எத்தனையும்
தேனாளும் பொழில் பிரமபுரத்துறையும் தீவணனை
நாநாளும் நன்னியமம் செய்தவன்சீர் நவின்றேத்தே
(5)
கண்ணுதலான், வெண்ணீற்றான், கமழ்சடையான், விடையேறி
பெண்ணிதமாம் உருவத்தான், பிஞ்ஞகன், பேர் பலவுடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரம் தொழவிரும்பி
எண்ணுதலாம் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே
(6)
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு
இங்கே என்றருள் புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர் பிரமபுரத்துறையும்
சங்கே ஒத்தொளிர் மேனிச் சங்கரன்தன் தன்மைகளே
(7)
சிலையது வெஞ்சிலையாகத் திரிபுர மூன்றெரிசெய்த
இலைநுனை வேல் தடக்கையன், ஏந்திழையாள் ஒருகூறன்
அலைபுனல்சூழ் பிரமபுரத்தருமணியை அடிபணிந்தால்
நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகில் பெறலாமே
(8)
எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள்
நெரித்தருளும் சிவமூர்த்தி, நீறணிந்த மேனியினான்
உரித்தவரித் தோலுடையான் உறை பிரமபுரம் தன்னைத்
தரித்தமனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே
(9)
கரியானும் நான்முகனும் காணாமைக் கனலுருவாய்
அரியானாம் பரமேட்டி, அரவஞ்சேர் அகலத்தான்
தெரியாதான் இருந்துறையும் திகழ்பிரமபுரம் சேர
உரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே
(10)
உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான்
முடையிலார் வெண்தலைக்கை மூர்த்தியாம் திருவுருவன்
பெடையிலார் வண்டாடும் பொழில் பிரமபுரத்துறையும்
சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே
(11)
தன்னடைந்தார்க்கின்பங்கள் தருவானைத், தத்துவனைக்
கல்அடைந்த மதில் பிரமபுரத்துறையும் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்தும் இவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள் பலஅடைந்தார் புண்ணியரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page