(1)
எரியார் மழுவொன்றேந்தி, அங்கை இடுதலையே கலனா
வரியார் வளையார் ஐயம் வவ்வாய், மாநலம் வவ்வுதியே
சரியா நாவின் வேதகீதன், தாமரை நான்முகத்தன்
பெரியான் பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே
(2)
பெயலார் சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே
கயலார் தடங்கண் அஞ்சொல் நல்லார் கண்துயில் வவ்வுதியே
இயலால் நடாவி இன்பமெய்தி இந்திரன்ஆள் மண்மேல்
வியலார் முரசம்ஓங்கு செம்மை வேணுபுரத்தானே
(3)
நகலார் தலையும் வெண்பிறையும் நளிர்சடை மாட்டயலே
பகலாப் பலிதேர்ந்தையம் வவ்வாய், பாய்கலை வவ்வுதியே
அகலாதுறையும் மாநிலத்தில் அயலின்மையால் அமரர்
புகலால் மலிந்த பூம்புகலி மேவிய புண்ணியனே
(4)
சங்கோடிலங்கத் தோடுபெய்து, காதிலொர் தாழ்குழையன்
அங்கோல் வளையார் ஐயம் வவ்வாய், ஆனலம் வவ்வுதியே
செங்கோல் நடாவிப் பல்லுயிர்க்கும் செய்வினை மெய்தெரிய
வெங்கோத் தருமன் மேவியாண்ட வெங்குரு மேயவனே
(5)
தணிநீர் மதியம் சூடிநீடு தாங்கிய தாழ்சடையன்
பிணிநீர் மடவார் ஐயம் வவ்வாய், பெய்கலை வவ்வுதியே
அணிநீர் உலகமாகி எங்கும் ஆழ்கடலால் அழுங்கத்
துணிநீர் பணியத் தான்மிதந்த தோணிபுரத்தானே
(6)
கவர்பூம் புனலும், தண்மதியும், கமழ்சடை மாட்டயலே
அவர்பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆனலம் வவ்வுதியே
அவர்பூண் அரையர்க்காதியாய அடல் மன்னன் ஆள்மண்மேல்
தவர்பூம் பதிகள் எங்குமெங்கும் தங்கு தராயவனே
(7)
முலையாழ் கெழுவ, மொந்தை கொட்ட, முன்கடை மாட்டயலே
நிலையாப் பலிதேர்ந்தையம் வவ்வாய், நீநலம் வவ்வுதியே
தலையாய்க் கிடந்திவ்வையமெல்லாம் தன்னதொர் ஆணைநடாய்ச்
சிலையான் மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுர மேயவனே
(8)
எருதே கொணர்கென்றேறி, அங்கை இடுதலையே கலனாக்
கருதேர் மடவார் ஐயம் வவ்வாய், கண்துயில் வவ்வுதியே
ஒருதேர் கடாவி ஆரமருள் ஒருபதுதேர் தொலையப்
பொருதேர் வலவன் மேவியாண்ட புறவமர் புண்ணியனே
(9)
துவர்சேர் கலிங்கப் போர்வையாரும், தூய்மையிலாச் சமணும்
கவர் செய்துழலக் கண்டவண்ணம், காரிகை வார்குழலார்
அவர் பூம்பலியோடையம் வவ்வாய், ஆனலம் வவ்வுதியே
தவர்செய் நெடுவேல் சண்டன்ஆளச் சண்பை அமர்ந்தவனே
(10)
நிழலால் மலிந்த கொன்றைசூடி, நீறுமெய் பூசி, நல்ல
குழலார் மடவார் ஐயம் வவ்வாய், கோல்வளை வவ்வுதியே
அழலாய் உலகம் கவ்வைதீர, ஐந்தலை நீள்முடிய
கழல்நாகரையன் காவலாகக் காழி அமர்ந்தவனே
(11)
கட்டார் துழாயன், தாமரையான் என்றிவர் காண்பரிய
சிட்டார் பலிதேர்ந்து ஐயம் வவ்வாய், செய்கலை வவ்வுதியே
நட்டார் நடுவே நந்தன்ஆள, நல்வினையால் உயர்ந்த
கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சை அமர்ந்தவனே
(12)
கடையார் கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க் கவுணி
நடையார் பனுவல் மாலையாக ஞானசம்பந்தன் நல்ல
படையார் மழுவன் மேல் மொழிந்த பல்பெயர்ப் பத்தும் வல்லார்க்கு
அடையா வினைகள் உலகில் நாளும்; அமருலகு ஆள்பவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...