சீகாழி – சம்பந்தர் தேவாரம் (44):

<– சீகாழி

(1)
வண்தரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
ஒண்தரங்க இசைபாடும் அளியரசே, ஒளிமதியத்
துண்டர், அங்கப் பூண்மார்பர், திருத்தோணிபுரத்துறையும்
பண்டரங்கர்க்கென் நிலைமை பரிந்தொருகால் பகராயே
(2)
எறிசுறவம் கழிக்கானல் இளங்குருகே, என்பயலை
அறிவுறாதொழிவதுவும் அருவினையேன் பயனன்றே
செறிசிறார் பதமோதும் திருத்தோணிபுரத்துறையும்
வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே
(3)
பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
கண்பகத்தின் வாரணமே, கடுவினையேன் உறுபயலை
செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணிபுரத்துறையும்
பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே
(4)
காண்தகைய செங்கால்ஒண் கழிநாராய், காதலால்
பூண்தகைய முலைமெலிந்து பொன்பயந்தாள் என்றுவளர்
சேண்தகைய மணிமாடத் திருத்தோணிபுரத்துறையும்
ஆண்தகையாற்கின்றே சென்றடியறிய உணர்த்தாயே
(5)
பாராரே எனையொருகால், தொழுகின்றேன், பாங்கமைந்த
காராரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்
தேராரு நெடுவீதித் திருத்தோணிபுரத்துறையும்
நீராரும் சடையாருக்கென் நிலைமை நிகழ்த்தீரே
(6)
சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச
வீற்றிருந்த அன்னங்காள், விண்ணோடுமண் மறைகள்
தோற்றுவித்த திருத்தோணிபுரத்தீசன் துளங்காத
கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே
(7)
முன்றில்வாய் மடல்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை
அன்றில்காள், பிரிவுறுநோய் அறியாதீர், மிகவல்லீர்
தென்றலார் புகுந்துலவும் திருத்தோணிபுரத்துறையும்
கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே
(8)
பால்நாறு மலர்ச்சூதப் பல்லவங்கள் அவைகோதி
ஏனோர்க்கும் இனிதாக மொழியும்எழில் இளங்குயிலே
தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணிபுரத்தஅமரர்
கோனாரை என்னிடைக்கே வரஒருகால் கூவாயே
(9)
நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன்
பொற்பமைந்த வாயலகில் பூவைநல்லாய் போற்றுகின்றேன்
சொற்பதம்சேர் மறையாளர் திருத்தோணிபுரத்துறையும்
விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே
(10)
சிறையாரு மடக்கிளியே இங்கேவா, தேனொடுபால்
முறையாலே உணத்தருவன், மொய்பவளத்தொடு தரளம்
துறையாரும் கடல்தோணிபுரத்தீசன் துளங்கும்இளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே
(11)
போர்மிகுத்த வயல் தோணிபுரத்துறையும் புரிசடையெம்
கார்மிகுத்த கறைக்கண்டத்திறையவனை, வண்கமலத்
தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த
சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகம் சேர்வாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page