சீகாழி – சம்பந்தர் தேவாரம் (43):

<– சீகாழி

(1)
அன்ன மென்னடை அரிவையோடு இனிதுறை அமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக்கம் மலர் வைத்தவர், வேதம் தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர், பருமதில் சிரபுரத்தார், சீரார்
பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே
(2)
கோல மாகரி உரித்தவர், அரவொடும் ஏனக்கொம்பு இளஆமை
சாலப் பூண்டு, தண்மதியது சூடிய சங்கரனார், தம்மைப்
போலத் தம்அடியார்க்கும் இன்பளிப்பவர், பொருகடல் விடமுண்ட
நீலத்தார் மிடற்றண்ணலார், சிரபுரம்தொழ வினை நில்லாவே
(3)
மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் தவங்கெட மதித்தன்று
கானத்தே திரி வேடனாய் அமர்செயக் கண்டருள் புரிந்தார், பூந்
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்துறை எங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை குற்றங்கள் குறுகாவே
(4)
மாணி தன்னுயிர் மதித்துண வந்த அக்காலனை உதைசெய்தார்
பேணி உள்கு மெய்யடியவர் பெருந்துயர்ப் பிணக்கறுத்தருள் செய்வார்
வேணி வெண்பிறை உடையவர், வியன்புகழ்ச் சிரபுரத்தமர்கின்ற
ஆணிப்பொன்னினை அடிதொழும் அடியவர்க்கருவினை அடையாவே
(5)
பாரு நீரொடு பல்கதிர் இரவியும், பனிமதி ஆகாசம்
ஓரும் வாயுவும், ஒண்கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார்
சேரும் சந்தனம் அகிலொடு வந்திழி செழும்புனல் கோட்டாறு
வாரும் தண்புனல்சூழ் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே
(6)
ஊழி அந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ்வுலகங்கள் அவைமூட
ஆழிஎந்தை என்றமரர்கள் சரண்புக, அந்தரத்துயர்ந்தார் தாம்
யாழினேர் மொழி ஏழையோடினிதுறை இன்பன், எம்பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபும் தொழுதெழ வல்வினை அடையாவே
(7)
பேய்கள் பாடப், பல்பூதங்கள் துதிசெயப், பிணமிடும் சுடுகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட, மாநடமாடும் வித்தகனார், ஒண்
சாய்கள்தான் மிகஉடைய தண்மறையவர் தகு சிரபுரத்தார் தாம்
தாய்கள் ஆயினார் பல்லுயிர்க்கும், தமைத் தொழுமவர் தளராரே
(8)
இலங்கு பூண்வரை மார்புடை இராவணன் எழில்கொள் வெற்பெடுத்தன்று
கலங்கச் செய்தலும், கண்டுதம் கழலடி நெரிய வைத்தருள் செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல் மன்றதனிடை புகுந்தாரும்
குலங்கொள் மாமறையவர் சிரபுரம் தொழுதெழ வினை குறுகாவே
(9)
வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன், மாயன் என்றிவர் அன்று
கண்டு கொள்ளவோர் ஏனமோடு அன்னமாய்க் கிளறியும் பறந்தும்தாம்
பண்டு கண்டது காணவே நீண்டஎம் பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரம் தொழுதெழ வினையவை கூடாவே
(10)
பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும், பார்மிசைத் துவர்தோய்ந்த
செறித்த சீவரத் தேரரும் தேர்கிலாத் தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்புதின்று ஆவியில் மூழ்கிட, இளவாளை
வெறித்துப் பாய்வயல் சிரபுரம்தொழ வினை விட்டிடும் மிகத்தானே
(11)
பரசு பாணியைப், பத்தர்கள் அத்தனைப், பையரவோடக்கு
நிரைசெய் பூண் திருமார்புடை நிமலனை, நித்திலப் பெருந்தொத்தை
விரைசெய் பூம்பொழில் சிரபுரத்தண்ணலை, விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page