சீகாழி – சம்பந்தர் தேவாரம் (63):

<– சீகாழி

(1)
பூதத்தின் படையினீர், பூங்கொன்றைத் தாரினீர்
ஓதத்தின் ஒலியொடும் உம்பர் வானவர் புகுந்து
வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும்
பாதத்தீர், வேணுபுரம் பதியாகக் கொண்டீரே
(2)
சுடுகாடு மேவினீர், துன்னம்பெய் கோவணந்தோல்
உடையாடை அதுகொண்டீர், உமையாளை ஒருபாகம்
அடையாளமது கொண்டீர், அங்கையினில் பரசுவெனும்
படையாள்வீர், வேணுபுரம் பதியாகக் கொண்டீரே
(3)
கங்கைசேர் சடைமுடியீர், காலனைமுன் செற்றுகந்தீர்
திங்களோடிள அரவம் திகழ்சென்னி வைத்துகந்தீர்
மங்கையோர் கூறுடையீர், மறையோர்கள் நிறைந்தேத்தப்
பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே
(4)
நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட கொன்றையினோடு எழில்மத்தம் இலங்கவே
சீர்கொண்ட மாளிகைமேல் சேயிழையார் வாழ்த்துரைப்பக்
கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே
(5)
ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு
சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார்
காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே
(6)
மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர்
துணிமல்கு கோவணத்தீர், சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்
பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத்து
அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே
(7)
நீலஞ்சேர் மிடற்றினீர், நீண்டசெஞ் சடையினீர்
கோலஞ்சேர் விடையினீர், கொடுங்காலன் தனைச் செற்றீர்
ஆலஞ்சேர் கழனி அழகார் வேணுபுரம் அமரும்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாக் கொண்டீரே
(8)
இரைமண்டிச் சங்கேறும் கடல்சூழ்தென் இலங்கையர்கோன்
விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர், வரைதன்னில்
கரைமண்டிப் பேரோதம் கலந்தெற்றும் கடற்கவினார்
விரைமண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே
(9)
தீயோம்பு மறைவாணர்க்காதியாம் திசைமுகன் மால்
போயோங்கி இழிந்தாரும் போற்றரிய திருவடியீர்
பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு
சேயோங்கு வேணுபுரம் செழும்பதியாத் திகழ்ந்தீரே
(10)
நிலையார்ந்த உண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்
புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே
நிலையாகப் பேணீநீ சரண்என்றார் தமைஎன்றும்
விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page