(1)
நிலவும் புனலும், நிறை வாளரவும்
இலகும் சடையார்க்கிடமாம், எழிலார்
உலவும் வயலுக்கொளியார் முத்தம்
விலகும் கடலார் வேணுபுரமே
(2)
அரவார் கரவன், அமையார் திரள்தோள்
குரவார் குழலாள் ஒருகூறன் இடம்
கரவாத கொடைக் கலந்தார் அவர்க்கு
விரவாக வல்லார் வேணுபுரமே
(3)
ஆகம் அழகாய் அவள்தான் வெருவ
நாகம் உரிபோர்த்தவன் நண்ணுமிடம்
போகம் தருசீர் வயல்சூழ் பொழில்கள்
மேகம் தவழும் வேணுபுரமே
(4)
காசக் கடலில் விடமுண்ட கண்டத்து
ஈசர்க்கிடமாவது, இன்நறவ
வாசக் கமலத்தனம் வன்திரைகள்
வீசத் துயிலும் வேணுபுரமே
(5)
அரையார் கலைசேர் அனமென் நடையை
உரையா உகந்தான் உறையும் இடமாம்
நிரையார் கமுகின் நிகழ் பாளையுடை
விரையார் பொழில்சூழ் வேணுபுரமே
(6)
ஒளிரும் பிறையும் முறுகூவிளவின்
தளிரும் சடைமேல் உடையான் இடமாம்
நளிரும் புனலின் நலசெங் கயல்கள்
மிளிரும் வயல்சூழ் வேணுபுரமே
(7)
…
(8)
ஏவும் படைவேந்தன் இராவணனை
ஆவென்றலற அடர்த்தான் இடமாம்
தாவும் மறி மானொடு தண்மதியம்
மேவும் பொழில்சூழ் வேணுபுரமே
(9)
கண்ணன், கடிமா மலரில் திகழும்
அண்ணல் இருவர் அறியா இறையூர்
வண்ணச் சுதை மாளிகை மேல்கொடிகள்
விண்ணில் திகழும் வேணுபுரமே
(10)
போகம் அறியார் துவர் போர்த்துழல்வார்
ஆகம் அறியா அடியார் இறையூர்
மூகம் அறிவார் கலை முத்தமிழ் நூல்
மீகம் அறிவார் வேணுபுரமே
(11)
கலமார் கடல்போல் வளமார் தருநல்
புலமார் தரு வேணுபுரத்திறையை
நலமார் தரு ஞானசம்பந்தன் சொன்ன
குலமார் தமிழ்கூறுவர் கூர்மையரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...