சீகாழி – சம்பந்தர் தேவாரம் (60):

<– சீகாழி

(1)
மின்னன எயிறுடை விரவலோர்கள் தம்
துன்னிய புரம்உகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்தராய் நகர்
அன்னமன்ன நடை அரிவை பங்கரே
(2)
மூதணி முப்புரத்தெண்ணிலோர்களை
வேதணி சரத்தினால் வீட்டினார் அவர்
போதணி பொழிலமர் பூந்தராய் நகர்த்
தாதணி குழலுமை தலைவர் காண்மினே
(3)
தருக்கிய திரிபுரத்தவர்கள் தாம்உகப்
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்
பொருக்கடல் புடைதரு பூந்தராய் நகர்க்
கருக்கிய குழல்உமை கணவர் காண்மினே
(4)
நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
மாகமார் புரங்களை மறித்த மாண்பினர்
பூகமார் பொழிலணி பூந்தராய் நகர்ப்
பாகமர் மொழிஉமை பங்கர் காண்மினே
(5)
வெள்ளெயிறுடையஅவ் விரவலார்கள் ஊர்
ஒள்ளெரி ஊட்டிய ஒருவனார், ஒளிர்
புள்ளணி புறவினில் பூந்தராய் நகர்க்
கள்ளணி குழல்உமை கணவர் காண்மினே
(6)
துங்கியறானவர் தோற்ற மாநகர்
அங்கியில் வீழ்தர வாய்ந்த அம்பினர்
பொங்கிய கடலணி பூந்தராய் நகர்
அங்கயலன கணி அரிவை பங்கரே
(7)
அண்டர்கள் உய்ந்திட அவுணர் மாய்தரக்
கண்டவர், கடல்விடம் உண்ட கண்டனார்
புண்டரீக வயல் பூந்தராய் நகர்
வண்டமர் குழலி தன் மணாளர் காண்மினே
(8)
மாசின அரக்கனை வரையின் வாட்டிய
காய்சின எயில்களைக் கறுத்த கண்டனார்
பூசுரர் பொலிதரு பூந்தராய் நகர்க்
காசைசெய் குழலுமை கணவர் காண்மினே
(9)
தாமுகமாக்கிய அசுரர் தம்பதி
வேமுகமாக்கிய விகிர்தர், கண்ணனும்
பூமகன் அறிகிலாப் பூந்தராய் நகர்க்
கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே
(10)
முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம்
அத்தகும் அழலிடை வீட்டினார், அமண்
புத்தரும் அறிவொணாப் பூந்தராய் நகர்க்
கொத்தணி குழல்உமை கூறர் காண்மினே
(11)
புரமெரி செய்தவர் பூந்தராய் நகர்ப்
பரமலி குழல்உமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன் மெய்ப்பாடல் வல்லவர்
சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page