(1)
செந்நெலங் கழனிப் பழனத்தயலே செழும்
புன்னை வெண்கிழியில் பவளம்புரை பூந்தராய்
துன்னிநல் இமையோர் முடிதோய் கழலீர் சொலீர்
பின்னு செஞ்சடையில் பிறை பாம்புடன் வைத்ததே
(2)
எற்று தெண்திரை ஏறிய சங்கினொடு இப்பிகள்
பொற்திகழ் கமலப் பழனம்புகு பூந்தராய்ச்
சுற்றிநல் இமையோர் தொழு பொற்கழலீர் சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ பெருமானிரே
(3)
சங்கு செம்பவளத்திரள் முத்தவை தாம்கொடு
பொங்கு தெண்திரை வந்தலைக்கும்புனல் பூந்தராய்த்
துங்கமால் களிற்றின்உரி போர்த்துகந்தீர் சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொடொன்றிய மாண்பதே
(4)
சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
பூமணம் கமழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்
சோமனும் அரவும் தொடர் செஞ்சடையீர் சொலீர்
காமன் வெண்பொடியாகக் கடைக்கண் சிவந்ததே
(5)
பள்ள மீனிரை தேர்ந்துழலும் பகுவாயன
புள்ளு நாள்தொறும் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்
துள்ளு மான்மறி ஏந்திய செங்கையினீர் சொலீர்
வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே
(6)
மாதிலங்கிய மங்கையர் ஆட மருங்கெலாம்
போதிலங்கமலம் மதுவார் புனல் பூந்தராய்ச்
சோதியஞ்சுடர்மேனி வெண்ணீறணிவீர் சொலீர்
காதிலங்குழை சங்க வெண்தோடுடன் வைத்ததே.
(7)
…
(8)
வருக்கமார்தரு வான் கடுவன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்கு மால்விடை மேல் வருவீர் அடிகேள் சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்தருளாக்கிய ஆக்கமே
(9)
வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை நீடுயர் மாடநிலாவிய பூந்தராய்ச்
சுருதி பாடிய பாணியல் தூமொழியீர் சொலீர்
கரிய மால் அயன் நேடி உமைக் கண்டிலாமையே
(10)
வண்டலம் கழனி மடைவாளைகள் பாய்புனல்
புண்டரீக மலர்ந்து மதுத்தரு பூந்தராய்த்
தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழலீர் சொலீர்
குண்டர் சாக்கியர் கூறியதாம் குறியின்மையே
(11)
மகர வார்கடல் வந்தணவும் மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம்பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்
பகவனாரைப் பரவு சொல்மாலை பத்தும் வல்லார்
அகல்வர் தீவினை, நல்வினையோடு உடனாவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...