சீகாழி – சம்பந்தர் தேவாரம் (53):

<– சீகாழி

(1)
உகலி ஆழ்கடல் ஓங்கு பாருளீர்
அகலியா வினை அல்லல் போயறும்
இகலியார் புரமெய்தவன் உறை
புகலியாம் நகர் போற்றி வாழ்மினே
(2)
பண்ணி ஆள்வதோர் ஏற்றர், பால்மதிக்
கண்ணியார், கமழ் கொன்றை சேர்முடிப்
புண்ணியன் உறையும் புகலியை
நண்ணுமின் நலமான வேண்டிலே
(3)
வீசு மின்புரை காதன், மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்
பூசு நீற்றினன், பூம்புகலியைப்
பேசுமின் பெரிதின்பம் ஆகவே
(4)
கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
பொடிகொள் மேனியன் பூம்புகலியுள்
அடிகளை அடைந்துஅன்பு செய்யுமே
(5)
பாதத்தார் ஒலி பல்சிலம்பினன்
ஓதத்தார் விடம் உண்டவன், படைப்
பூதத்தான், புகலிந் நகர் தொழ
ஏதத்தார்க்கிடமில்லை என்பரே
(6)
மறையினான் ஒலிமல்கு வீணையன்
நிறையினார் நிமிர்புன் சடையன்எம்
பொறையினான் உறையும் புகலியை
நிறையினால் தொழ நேசமாகுமே
(7)
கரவிடை மனத்தாரைக் காண்கிலான்
இரவிடைப் பலி கொள்ளும் எம்இறை
பொருவிடை உயர்த்தான் புகலியைப்
பரவிடப் பயில் பாவம் பாறுமே
(8)
அருப்பினார் முலைமங்கை பங்கினன்
விருப்பினான், அரக்கன் உரஞ்செகும்
பொருப்பினான், பொழிலார் புகலியூர்
இருப்பினான் அடியேத்தி வாழ்த்துமே
(9)
மாலும் நான்முகன் தானும் வார்கழல்
சீலமும் முடிதேட நீண்டெரி
போலும் மேனியன், பூம்புகலியுள்
பாலதாடிய பண்பன் நல்லனே
(10)
நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
ஒன்றதாக வையா உணர்வினுள்
நின்றவன், நிகழும் புகலியைச்
சென்று கைதொழச் செல்வமாகுமே
(11)
புல்லம்ஏறி தன் பூம்புகலியை
நல்ல ஞானசம்பந்தன் நாவினால்
சொல்லு மாலை ஈரைந்தும் வல்லவர்க்கு
இல்லையாம் வினை இருநிலத்துளே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page