சீகாழி – சம்பந்தர் தேவாரம் (51):

<– சீகாழி

(1)
விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
கொதியா வருகூற்றை உதைத்தவர் சேரும்
பதியாவது பங்கய நின்றலரத் தேன்
பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே
(2)
ஒன்னார் புரமூன்றும் எரித்த ஒருவன்
மின்னார் இடையாளொடும் கூடிய வேடம்
தன்னால் உறைவாவது தண்கடல் சூழ்ந்த
பொன்னார் வயல் பூம்புகலிந் நகர்தானே
(3)
வலியின்மதி செஞ்சடை வைத்த மணாளன்
புலியின் அதள் கொண்டரையார்த்த புனிதன்
மலியும் பதி மாமறையோர் நிறைந்தீண்டிப்
பொலியும் புனல் பூம்புகலிந் நகர்தானே
(4)
கயலார் தடங்கண்ணியொடும் எருதேறி
அயலார் கடையில் பலிகொண்ட அழகன்
இயலால் உறையும் இடம் எண்திசையோர்க்கும்
புயலார் கடற்பூம் புகலிந் நகர்தானே
(5)
காதார்கன பொற்குழை தோடதிலங்கத்
தாதார் மலர்தண் சடையேற முடித்து
நாதான் உறையும் இடமாவது, நாளும்
போதார் பொழிற்பூம் புகலிந் நகர்தானே
(6)
வலமார் படைமான் மழுவேந்திய மைந்தன்
கலமார் கடல் நஞ்சமுதுண்ட கருத்தன்
குலமார் பதி கொன்றைகள் பொன் சொரியத்தேன்
புலமார் வயல்பூம் புகலிந் நகர்தானே
(7)
கறுத்தான் கனலால் மதில்மூன்றையும் வேவச்
செறுத்தான் திகழும் கடல் நஞ்சமுதாக
அறுத்தான் அயன்தன் சிரம்ஐந்திலும் ஒன்றைப்
பொறுத்தான் இடம்பூம் புகலிந் நகர்தானே
(8)
தொழிலால் மிகுதொண்டர்கள் தோத்திரம் சொல்ல
எழிலார் வரையால் அன்றரக்கனைச் செற்ற
கழலான் உறையும் இடம், கண்டல்கள் மிண்டிப்
பொழிலால் மலி பூம்புகலிந் நகர்தானே
(9)
மாண்டார் சுடலைப் பொடி பூசி மயானத்து
ஈண்டா நடமாடிய ஏந்தல், தன்மேனி
நீண்டான் இருவர்க்கெரியாய், அரவாரம்
பூண்டான் நகர் பூம்புகலிந் நகர்தானே
(10)
உடையார் துகில் போர்த்துழல்வார் சமண்கையர்
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்
கிடையாதவன் தன் நகர் நன்மலி பூகம்
புடையார்தரு பூம்புகலிந் நகர்தானே
(11)
இரைக்கும் புனல் செஞ்சடை வைத்த எம்மான் தன்
புரைக்கும் பொழில் பூம்புகலிந் நகர் தன்மேல்
உரைக்கும் தமிழ்ஞான சம்பந்தன் ஒண்மாலை
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page