சீகாழி – சம்பந்தர் தேவாரம் (39):

<– சீகாழி

(1)
விண்ணியங்கு மதிக்கண்ணியான், விரியும் சடைப்
பெண்நயங்கொள் திருமேனியான், பெருமான், அனல்
கண்நயங்கொள் திருநெற்றியான், கலிக்காழியுள்
மண்நயங்கொள் மறையாளர் ஏத்து மலர்ப்பாதனே
(2)
வலிய காலன்உயிர் வீட்டினான், மடவாளொடும்
பலி விரும்பியதொர் கையினான், பரமேட்டியான்
கலியை வென்ற மறையாளர்தம் கலிக்காழியுள்
நலியவந்த வினை தீர்த்துகந்த என் நம்பனே
(3)
சுற்றலா நற்புலித்தோல் அசைத்தயன் வெண்தலைத்
துற்றலாயதொரு கொள்கையான், சுடு நீற்றினான்
கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலிக்காழியுள்
மல்தயங்கு திரள்தோள்எம் மைந்தன் அவன் நல்லனே
(4)
பல்லயங்கு தலையேந்தினான், படு கானிடை
மல்லயங்கு திரள் தோள்களார நடமாடியும்
கல்லயங்கு திரைசூழ நீள்கலிக் காழியுள்
தொல்லயங்கு புகழ் பேணநின்ற சுடர் வண்ணனே
(5)
தூநயங்கொள் திருமேனியில் பொடிப்பூசிப் போய்
நாநயங்கொள் மறையோதி, மாதொரு பாகமாக்
கானயங்கொள் புனல் வாசமார் கலிக்காழியுள்
தேனயங்கொள் முடி ஆனைந்தாடிய செல்வனே
(6)
சுழியிலங்கும் புனல் கங்கையாள் சடையாகவே
மொழியிலங்கும் மடமங்கை பாகம் உகந்தவன்
கழியிலங்கும் கடல் சூழும் தண்கலிக் காழியுள்
பழியிலங்கும் துயர்ஒன்றிலாப் பரமேட்டியே
(7)
முடியிலங்கும் உயர் சிந்தையான், முனிவர் தொழ
வடியிலங்கும் கழலார்க்கவே அனல் ஏந்தியும்
கடியிலங்கும் பொழில் சூழும் தண்கலிக் காழியுள்
கொடியிலங்கும் இடையாளொடும் குடிகொண்டதே
(8)
வல்லரக்கன் வரை பேர்க்க வந்தவன் தோள்முடி
கல்லரக்கி விறல் வாட்டினான், கலிக்காழியுள்
நல்லொருக்கியதொர் சிந்தையார் மலர் தூவவே
தொல்லிருக்கும் மறையேத்துகந்து உடன் வாழுமே
(9)
மருவு நான்மறையோனும், மாமணி வண்ணனும்
இருவர் கூடிஇசைந்தேத்தவே எரியான் தனூர்
வெருவ நின்ற திரையோதம் வார்வியல் முத்தவை
கருவையார் வயல் சங்குசேர் கலிக்காழியே
(10)
நன்றியொன்றும் உணராத வன்சமண் சாக்கியர்
அன்றிஅங்கவர் சொன்ன சொல்லவை கொள்கிலான்
கன்றுமேதி இளங்கானல் வாழ் கலிக்காழியுள்
வென்றிசேர் வியன்கோயில் கொண்ட விடையாளனே
(11)
கண்ணு மூன்றும்உடை ஆதிவாழ் கலிக்காழியுள்
அண்ணல் அந்தண் அருள்பேணி ஞானசம்பந்தன் சொல்
வண்ணமூன்றும் தமிழில் தெரிந்திசை பாடுவார்
விண்ணு மண்ணும் விரிகின்ற தொல் புகழாளரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page